ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடையும் வீரர்கள், காளைகளுக்கு இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் திட்டம்: அமைச்சர் ரகுபதி தகவல்

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடையும் வீரர்கள், காளைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களை பாதுகாக்கும் சட்டமாகவோ, அவர்களிடமிருந்து  வரிவசூல் செய்யும் சட்டமாகவோ இருக்கக்கூடாது என்பது தான் தமிழக அரசின்  நோக்கம்.  

முழுமையாக ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும். அதை நாங்கள் வலியுறுத்துவோம். ஒன்றிய அரசு, ஆன்லைன் ரம்மி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையை படித்துவிட்டு இது குறித்து முழுமையாக கருத்து தெரிவிக்கப்படும். தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டம் அனைவருக்கும் பொதுவானது, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. அதை அடிப்படையாக வைத்து ஒன்றிய அரசு அந்த சட்டத்தை கொண்டு வந்தால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

அதை விடுத்து ஆன்லைன் சூதாட்டங்களை நடத்துபவர்களை மறைமுகமாக பாதுகாக்கின்ற செய்கின்ற செயலாக இருந்தால் நிச்சயமாக அது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் நடைபெறும். அதேபோல் வருகிற 6ம்தேதி கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதை முறைப்படி நடத்தவே ஆன்லைன் பதிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: