×

பாணாவரம் பகுதியில் நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கியதால் மண்பாண்டம் தயாரிக்கும் பணி மந்தம்: பொங்கல் வருவாயை இழந்த தொழிலாளர்கள்

பாணாவரம்: பாணாவரம் பகுதியில் தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால், மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளர்களின் பணி மந்தமடைந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வரும் 15, 16, 17ம் தேதிகளில், தை பொங்கல் திருநாளை புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பொங்கலிட்டு தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம்பிக்கையோடு தைத்திருநாளை வரவேற்று மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவது வழக்கம். இப்பொங்கலுக்காக பல்வேறு இடங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவர்.

அதன்படி, அரக்கோணம் அருகே பாணாவரம் பகுதியில் உள்ள மோட்டூர், பழைய வேடந்தாங்கல், காட்டுப்பாக்கம், எலத்தூர், கோடம்பாக்கம், சூரை, மேல்வீராணம், புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் குறைந்த அளவே மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 2 வாரங்களுக்கு முன்பாகவே தொழிலாளர்கள் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு குறைந்த அளவிலான தொழிலாளர்களே பெயருக்கு இத்தொழிலில்  ஈடுபட்டு வருகின்றனர். சிலர் இத்தொழிலை முற்றிலும் கைவிட்டுள்ளனர்.

இதுகுறித்து, மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், ‘சென்ற ஆண்டு அடிக்கடி தொடர் மழை பெய்ததால் ஏரிகள் நிரம்பியுள்ளது. இதனால் எங்களுக்கு மண்பாண்டங்கள் செய்ய மண் எடுத்து வர முடிவதில்லை, கிடைப்பதும் இல்லை. மேலும் அனுமதியின்றி நாங்கள் மண்ணெடுக்க முடியாத நிலைமையும் உள்ளது. இது போன்ற பல்வேறு காரணங்களால்  எங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை வருவாய் ஈட்டக் கூடிய இத்தொழிலில், இந்த ஆண்டு குறைந்த அளவு வருவாய்க்குகூட வாய்ப்பில்லை’ என்றனர்.

Tags : Panavaram ,Pongal , In Panavaram area, the work of making earthenware is slow due to stagnation of water in the water tables: the workers lost their Pongal income.
× RELATED கரும்பு நடவில் விவசாயிகள் ஆர்வம்