×

தாளவாடி மலைப்பகுதியில் அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்

சத்தியமங்கலம்:  தாளவாடி மலைப்பகுதியில் அச்சுறுத்தி வரும் கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணிக்கான இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள அக்கூர் ஜோரை வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கருப்பன் யானை தினமும் கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவதோடு, இரவு நேரங்களில் காவல் பணி மேற்கொள்ளும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதன் காரணமாக திகினாரை, ரங்கசாமி கோயில், கரளவாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கருப்பன் யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் ரங்கசாமி கோயில் பகுதியில் நடமாடும் கருப்பன் யானையை கண்காணிப்பதற்காக பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ், முத்து என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. மேலும் கூடுதலாக கும்கி கலீம் கொண்டுவரப்பட உள்ளது.

இந்த மூன்று கும்கி யானைகளை பயன்படுத்தி கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி வேறு வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கருப்பன் யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடும் பணியில், யானையை கண்காணிப்பதற்காக பொள்ளாச்சியில் இருந்து கும்கி யானைகள் கபில்தேவ், முத்து வரவழைக்கப்பட்டு கருப்பன் யானை வெளியேறும் பகுதியில் கும்கி யானைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக கும்கியானை கலீம் இப்பகுதிக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இந்த நிலையில் யானையைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள வனக் குழுவினர், ஜீரஹள்ளி வனச்சரக அலுவலர் ராமலிங்கம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம், உலகளாவிய இயற்கைக்கான நிதியக ஊழியர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட குழுவினர் கருப்பன் யானை நடமாடும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கும்கி யானைகளை பயன்படுத்தி எந்த இடத்தில் கருப்பன் யானைக்கு மயக்க செலுத்தி பிடித்து, ரேடியோ காலர் பொருத்துவது மற்றும் வேறு வனப் பகுதிக்கு கொண்டு செல்வது குறித்து இடம் தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டனர்.

கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு தலைமை வன பாதுகாவலரின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். உத்தரவு வரப் பெற்றவுடன் கருப்பன் யானையை பிடிப்பதற்கான பணிகள் தொடங்கும் என தெரிவித்தனர். தாளவாடி மலைப் பகுதியில் தொடர்ச்சியாக விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கருப்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி வேறு வனப்பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ள தகவலறிந்த மலை கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags : Talawadi , Intensity of the work of choosing a place to capture the black elephant that is running wild in the Talawadi hills by injecting anesthesia.
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது