×

தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, காவல் நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர் கதையாக உள்ளது. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தர்மாபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கால்நடைகளை சிறுத்தை தொடர்ந்து வேட்டையாடி வந்ததால் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து தர்மாபுரம் கிராமத்தில் உள்ள சிவசுப்பிரமணியம் என்பவரது தோட்டத்தில் சிறுத்தையை பிடிக்க தாளவாடி வனத்துறையினர் கூண்டுவைத்து கண்காணித்து வந்தனர். மேலும் கூண்டில் சிறுத்தை சிக்குவதற்காக காவல் நாய் ஒன்றை கட்டி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அப்பகுதிக்கு வந்த சிறுத்தை அங்கு வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியது. கூண்டின் மற்றொரு பகுதியில் கட்டி வைத்திருந்த நாய் குரைத்ததால் அக்கம் பக்கத்தில் இருந்த விவசாயிகள் சென்று பார்த்தபோது கூண்டுக்குள் சிறுத்தை சிக்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தாளவாடி வனத்துறை அலுவலர் சதீஷ் நிர்மல் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கூண்டில் சிக்கிய சிறுத்தையை வேறு பகுதிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். சிறுத்தையை எங்கு கொண்டு சென்று விடுவிப்பது என்பது குறித்து வனத்துறை உயர்அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

 

The post தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Talawadi Highlands ,Satyamangalam Tigers Archive Forest ,Erode District ,
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு