×

தொடர் மழை, நீர்வரத்து காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 91.8 சதவீதம் நீர் இருப்பு: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தொடர் மழை காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 91.8 சதவீதம் நீர் இருப்பு உள்ளதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பருவ மழை மற்றும் மாண்டஸ் புயல் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த கன மழை காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளிலும் நீர் இருப்பு முழு கொள்ளளவை எட்டி வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் நேற்றைய நிலவரப்படி 3,231 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. வரத்துக் கால்வாய்கள் மூலமாகவும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீராலும் 800 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி 200 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலமாகவும், மெட்ரோ வாட்டருக்காககவும் என மொத்தம் 603 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புழல் ஏரியில் நேற்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் தற்போது 2,950 மில்லியன் கன அடி நீர் உள்ளது. நீர்வரத்து 351 கன அடி‌யாகவும், சென்னை மக்களுக்காக 187 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.   
சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் 8,31 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 15 கன‌அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
 
செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 2,675 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இதில் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் நீர், மழை நீர் என 150 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதேபோல் கண்ணன்கோட்டையில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது முழு கொள்ளளவை எட்டி 500 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஆக, ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில் தற்போது 10,793 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதாவது 91.8 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. எனவே, வரும் கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படும், என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Chennai ,Water Resources Department , 91.8 percent water availability in the lakes that provide drinking water to the people of Chennai due to continuous rains and inundation: Water Resources Department officials informed
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்