×

2023ல் சச்சினின் சாதனையை முறியடிப்பாரா கோஹ்லி? சஞ்சய்பங்கர் பேட்டி

மும்பை: 1020 நாட்கள் சதமடிக்காமல் இருந்த விராட் கோஹ்லி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 71வது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். மேலும், அதுதான் கோஹ்லிக்கு டி20 கிரிக்கெட்டில் முதல் சதமாகும். இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 44வது சதத்தை எடுத்து அசத்தினார். இப்படி, கடந்த வருடத்தில் கோஹ்லி 2 சதங்களை கடந்து, மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார். இந்த வருடத்திலும் கோஹ்லி அதிக சதங்களை விளாசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினின் 49 சதங்கள் என்னும் சாதனையை தகர்க்க கோஹ்லிக்கு இன்னமும் 6 சதங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த வருடத்தில், அக்டோபர் இறுதியில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளதால், அத்தொடரில் கோஹ்லி 50வது சதத்தை பூர்த்தி செய்ய வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இந்நிலையில், கோஹ்லியால் இந்த வருடத்தில் 6 சதங்களை அடிக்க முடியுமா என்பது குறித்து, முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் கூறுகையில், ‘‘கோஹ்லி 44 ஒருநாள் சதங்களையும், தனது இளம் வயதிலேயே அடித்துவிட்டார். இந்த வருடத்தில் இந்தியா 26-27 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ஆகையால், கோஹ்லி இதில் 6 சதங்களை அடித்து, வரலாறு படைக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் இதில் கோஹ்லிக்கு இருக்கும் ஒரேயொரு சிக்கல், பணிச்சுமையால் எடுக்கப்படும் ஓய்வுதான்.

26-27 போட்டிகளிலும் அவர் முழுமையாக பங்கேற்பாரா என்பதை உறுதியாக கூறிவிட முடியாது. ஆகையால், இந்த ஒரு பிரச்னை காரணமாக அவர் இந்த வருடத்தில் 6 சதங்களை எடுக்க முடியாமல்கூட போகலாம்” என்றார். 34 வயதாகும் கோஹ்லி, ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு ஓய்வுபெற வாய்ப்புகள் இருக்கிறது. இதனால், இந்த உலகக் கோப்பை தொடர் முடிவதற்குள் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 6 சதங்களை அடித்தால் மட்டுமே, சச்சினின் 49 சதங்கள் சாதனையை தகர்க்க முடியும் என்ற நிலை இருக்கிறது. இந்திய அணி அடுத்து இலங்கைக்கு எதிராக டி20, ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், நாளை முதல் துவங்கும் டி20 தொடரில் கோஹ்லி சேர்க்கப்படவில்லை. ஒருநாள் தொடரில் கோஹ்லிக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kohli ,Sachin ,Sanjay Pankar , Will Kohli break Sachin's record in 2023? Interview with Sanjay Pankar
× RELATED சில்லிபாயிண்ட்…