×

சீனாவில் புத்த மதத்திற்கு எதிராக கடும் அடக்குமுறை: தலாய் லாமா குற்றச்சாட்டு

புத்தகயா: ‘‘சீனாவில் புத்த மதத்திற்கு எதிராகவும், பவுத்தர்களுக்கு எதிராகவும் கடும் அடக்குமுறை நிலவுகிறது’’ என தலாய் லாமா குற்றம்சாட்டி உள்ளார். திபெத்திய புத்த மத குருவான தலாய் லாமா, சீனாவில் மாவோ சேதுங்கின் கம்யூனிஸ்ட் புரட்சிக்குப் பிறகு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் குடியேறிய அவர் 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பீகாரில் புத்தர் ஞானம் பெற்ற புத்தகயாவில் நடந்த புத்த மஹோத்சவம் விழாவில் பங்கேற்றார்.

அதைத் தொடர்ந்து, 87 வயதாகும் தலாய் லாமாவுக்கு நீண்ட ஆயுள்  வேண்டிய நடந்த பாராம்பரிய பிரார்த்தனையில் நேற்று அவர் பங்கேற்றார். இதில் பல புத்த மத துறவிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய தலாய் லாமா, ‘‘திபெத்தின் புத்த பாரம்பரியம் தற்போது மேற்கத்திய மக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. கடந்த காலங்களில் புத்த மதம் ஆசியாவின் ஓர் மதமாக கருதப்பட்ட நிலையில், இப்போது அதன் தத்துவங்களும், கொள்கைகளும் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இது திபெத்தில் மட்டுமல்ல சீனாவிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனா புத்த மத நாடாக இருந்தாலும், அங்கு புத்த மதம் மீதும் புத்த மதத்தினர் மீதும் பல அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் நிகழ்ந்து வருகின்றன. அதையெல்லாம் தாண்டி தற்போது சீனாவிலும் புத்த மதத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.

எனவே சீனாவிலும், உலகிலும் நிறைய மாற்றங்கள் நிகழக்கூடும். எனது நீண்ட ஆயுளுக்கான பிார்த்தனை செய்யப்படும் இந்த விழா, ஆங்கில புத்தாண்டின் முதல் தினத்தில் வருவது தற்செயல் நிகழ்வு. இதுவும் ஒரு வகையில் நல்ல காலம் உதயமாவதை குறிப்பதாக இருக்கக் கூடும்’’ என்றார்.
முன்னதாக, நேற்று முன்தினம் பேசிய தலாய் லாமா, புத்த மதத்தை வேரோடு அழிக்க சீன கம்யூனிஸ்ட் அரசு முயற்சிப்பதாக கடுமையாக குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Buddhism ,China ,Dalai Lama , China, Buddhism, heavy repression, Dalai Lama accused
× RELATED நிலவில் அணு மின் நிலையம் இந்தியா-சீனா இணைந்து செயல்பட விருப்பம்!!