×

பெண் மருத்துவர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: கொரோனா கால கட்டத்தில் விடுதியில் தங்கி இருந்த பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது அரசு மருத்துவர்கள் தங்குவதற்காக சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தனியார் ஓட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. மருத்துவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு சுழற்சி முறையில் பணியில் ஈடுபட சுகாதாரத்துறை சார்பில் ஓட்டல்களில் தங்குவதற்கு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது.

அந்த சமயத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களாக பணியாற்றிய வெற்றி செல்வன் மற்றும் மோகன்ராஜை தியாகராயநகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். இந்நிலையில், அதே விடுதியில் வேறு அறையில் பெண் மருத்துவர்கள் தங்கி இருந்தனர். இதில் ஒரு பெண் மருத்துவரை வெற்றி செல்வன் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய நிலையில் மற்றொரு பெண் மருத்துவருக்கு மோகன் ராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பெண் மருத்துவர்களின் புகார் தொடர்பாக விசாகா கமிட்டி விசாரித்த நிலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு வெற்றி செல்வன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும், மோகன்ராஜ் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கும் பதிவு செய்யப்பட்டன. 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம் மருத்துவர் வெற்றி செல்வனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.   


Tags : Rajivkandi Hospital , Woman, Doctor, Sex, Violence, Rajiv Gandhi, Jail
× RELATED ராஜிவ்காந்தி அரசு பொது...