சென்னை: பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை சிக்னல் அருகே, கடந்த சில நாட்களுக்கு முன் கார் மோதி நேரு சிலை சேதமடைந்தது. இதையடுத்து, அப்பகுதியில் புதிய நேரு சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பார்வையிட்டார். இதையடுத்து, மாநில துணைத்தலைவர் கோபண்ணா, மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் லயன் டி.ரமேஷ், ஆகியோருடன் ஆலோசனை செய்தார். பின்னர், அவர் பேசுகையில், ‘‘இந்த இடத்தில் சேதமடைந்த நேரு சிலை புதியதாக அமைக்கப்பட உள்ளது. நேரு இந்த தேசத்தை உருவாக்கியவர், தேசம் என்ற பெயர் இல்லாமல் 500 க்கும் மேற்பட்ட பகுதிகளாக பிரிந்து கிடந்ததை ஒன்று சேர்த்தார். இந்த நாட்டின் ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களை மனதில் வைத்து இந்த தேசத்தின் வளர்ச்சி திட்டத்தை உருவாக்கினார்.
தனியார்கள் வளர்வதை விட பொதுத்துறை நிறுவனங்கள் வளர வேண்டும் என்று சொல்லி, இந்திய ரயில்வே, எல்ஐசி, வங்கிகளை தேசிய மயமாக்கினார். விமான நிலையங்கள் தனியார் வசம் இருந்தது அதை பொதுத்துறையாக ஆக்கினார். இந்தியா முழுவதும் சொத்துக்களாக்கி அதில் மக்களை பங்குதாரர்களாக நேரு மாற்றினார். ஆனால் இன்று எல்லாமே தலைகீழாகி விட்டது. பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, எல்ஐசி, நெய்வேலி மின் நிலையம், விமான நிலையங்கள் போன்றவற்றின் பங்குகளை மோடி அரசாங்கம் தனியாருக்கு தாரை வார்த்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் டீசல் ரூ65க்கும், சமையல் எரிவாயு ரூ400 விற்கப்பட்டது. ஆனால் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ100க்கும், சமையல் எரிவாயு ரூ1200க்கும் விற்கப்படுகிறது. ஆனால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. அதனால் இன்னும் குறைவான விலைக்கு டீசல், சமையல் எரிவாயு கொடுக்கலாம்.
ஆனால் பெட்ரோல் கிணறுகளை எல்லாம் தனியாருக்கு கொடுத்திருப்பதால் அதனுடைய விலைகள் அதிகமாகி விட்டன. இந்தியா முழுவதும் தொலைத் தொடர்பை கொண்டு சென்றது பிஎஸ்என்எல். ஆனால் இன்று அம்பானியின் நிறுவனமான ஜியோவிற்காக பிஎஸ்என்எல்லை ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டார்கள். 4ஜி, 5ஜி யை அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்க்கு கொடுக்காமல் ஜியோவுக்கு கொடுக்கிறார்கள். 10 லட்சம் கோடி முதலாளிகளின் கடனை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன.
இதை கண்டித்து வங்கி ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்துள்ளனர். ஆனால் அதே வங்கிகள் விவசாயிகள், மாணவர்கள், அரசு ஊழியர்களின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களும், பெண்களும், பொதுமக்களும் லட்சக்கணக்கில் இதில் கலந்து கொண்டுள்ளனர். அந்த எழுச்சி பிற்போக்கு மோடி அரசாங்கத்தை வீழ்த்தும்.’’ என்றார்.
