×

பிராட்வே கடற்கரை சாலையில் வாடகை செலுத்தாத 200 கடைகளுக்கு சீல்: வருவாய்த்துறை நடவடிக்கை

தண்டையார்பேட்டை: பிராட்வே கடற்கரை சாலையில் வாடகை பாக்கி செலுத்தாத 200 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு, கடையின் அளவுக்கு ஏற்றார் போல் மாத வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீண்ட காலமாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி 5வது மண்டலம் 59வது வார்டுக்குட்பட்ட பிராட்வே கடற்கரை சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான செல்போன் கடை, விளையாட்டு பொருட்கள் விற்பனை கடை என 480 கடைகள் உள்ளன.

இதில், 200க்கும் மேற்பட்ட கடைகள் கடந்த 4 மாதங்களாக சுமார் ரூ5 லட்சம் வரை வாடகை செலுத்தவில்லை. இதுகுறித்து, மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியும், வாடகை செலுத்தாத காரணத்தால் நேற்று 200 கடைகளுக்கு உதவி வருவாய் அலுவலர் நிதிபதி தலைமையில், உரிமம் ஆய்வாளர்கள் கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அப்போது, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க எஸ்பினேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், சீல் வைக்கப்பட்ட கடையினர் நிலுவையில் உள்ள வாடகை பணத்தை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் செலுத்தினால் கடைக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Broadway Beach Road , Sealing of 200 unpaid shops on Broadway Beach Road: Revenue action
× RELATED பிராட்வே கடற்கரை சாலையில் வாடகை...