×

கால்பந்தின் கடவுள் என போற்றப்பட்ட பிரேசில் ஜாம்பவான் பீலே காலமானார்: பிரபலங்கள் இரங்கல்; ரசிகர்கள் கண்ணீர்

பிரேசிலா: பிரேசிலை சேர்ந்தபிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82வது வயதில் காலமானார். கால்பந்து விளையாட்டின் மன்னன் என்று அழைக்கப்படும் பீலே உலக கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர் என்ற சாதனை படைத்திருக்கிறார். தனது அபாரமான ஆட்டத்தால் எதிரணி ரசிகர்களை கூட கவர்ந்த பீலே தற்போது கால்பந்து ரசிகர்களை சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாக்கி சென்றுவிட்டார். கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து வந்ததால் பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். புற்றுநோய் மிகவும் முன்னேறி உடலின் சில பாகங்களுக்கு பரவியது. மேலும், நுரையீரல், இதய செயல் இழப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கான அதிநவீன பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பீலேவை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். இந்த சூழலில் பீலேவின் இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிப்பு அடைந்தது. தொடர்ந்து ஆபத்தான நிலையில் பீலேவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பீலே உயிரிழந்ததாக அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். பீலே மறைவுக்கு கால்பந்து நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பீலேவுக்கு ஒரு “குட்பை” போதுமானதாக இருக்காது. நேற்று, இன்று மற்றும் என்றென்றும் பல மில்லியன் மக்களுக்கு அவர் ஒரு உத்வேகம். நீங்கள் எப்பொழுதும் என்னிடம் காட்டிய அன்பு தூரத்திலிருந்தும் நாங்கள் பகிர்ந்துகொண்ட ஒவ்வொரு நொடியிலும் பிரதிபலித்தது.

அவரை என்றும் மறக்க முடியாது, கால்பந்து பிரியர்களான நம் ஒவ்வொருவருக்கும் அவரது நினைவு என்றென்றும் வாழும், என தெரிவித்துள்ளார். பிரேசில் வீரர் நெய்மர், பீலேவுக்கு முன், 10 என்பது வெறும் எண்ணாக இருந்தது. கால்பந்தை கலையாக, பொழுதுபோக்காக மாற்றினார். ஏழைகள், கறுப்பர்கள் மற்றும் பெரும்பாலானவர்களுக்காக அவர் குரல் கொடுத்தார். பிரேசிலுக்குத் தெரிவுநிலையைக் கொடுத்தார். அவர் போய்விட்டார் ஆனால் அவரது மந்திரம் உள்ளது. பீலே என்றென்றும் இருக்கிறார், என தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அணி கேப்டன் கைலியன் எம்பாப்பே, “கால்பந்தாட்டத்தின் ராஜா நம்மை விட்டு பிரிந்துவிட்டார், ஆனால் அவரது பாரம்பரியத்தை ஒருபோதும் மறக்க முடியாது. ஆர்ஐபி கிங்,” என பதிவிட்டுள்ளார்.

பிபா தலைவரான கியானி இன்ஃபான்டினோ, அழகான விளையாட்டை விரும்பும் அனைவருக்கும், நாங்கள் வர விரும்பாத நாள் இது. பீலேவை இழந்த நாள், என தெரிவித்துள்ளார். இதேபோல் மெஸ்சி உள்ளிட்ட வீரர்கள், பல்வேறு நாட்டு தலைவர்கள் பீலே மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் உலகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விளையாட்டு அமைச்சர் கால்பந்து கிங் என்று அறியப்பட்ட பீலே இதுவரை 1279 கோல்களை தனது கால்பந்து வாழ்க்கையில் அடித்திருக்கிறார். அவர் விளையாடிய காலத்தில் அவர்தான் அதிக சம்பளம் பெற்ற விளையாட்டு வீரராக திகழ்ந்தார். 1977ம் ஆண்டு கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பீலே அன்றிலிருந்து கால்பந்தின் சிறப்பு தூதராக செயல்பட்டார்.

பீலேவின் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு பல அரசியல் கட்சிகள் அவரை தேர்தலில் களம் இறக்கியது. இதில் பீலே 1995ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை பிரேசிலின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். பீலேக்கு தனது முதுமை வயதில் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதற்காக கடந்த 2021ம் ஆண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வயது மூப்பு காரணமாக சிகிச்சைக்கு பீலேவின் உடல் ஒத்துழைக்கவில்லை. கடந்த நவம்பர் 29ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீலே ஒரு மாத போராட்டத்திற்கு பிறகு தனது உயிரை விட்டார்.

தேசத்தின் அடையாளம் பிரேசில் தேசத்தின் அடையாளம் 1931ம் ஆண்டு கார்கோவடோ மலையில் நிறுவப்பட்டு தன் இரண்டு கைகளையும் விரித்து அருள் புரிந்துகொண்டிருக்கும் இயேசுவின் சிலை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின் அந்த சிலையைவிட ஒரு சிறுவன் பிரேசிலின் அடையாளமாக மாறினான். வறுமையை போக்க, ஷூ பாலிஷ் போட்டுக்கொண்டும், வீட்டு வேலை செய்துகொண்டும், டீக்கடையில் வேலை செய்துகொண்டும் இருந்த அந்த சிறுவன் புகழ்மிக்க இயேசு சிலைக்கு சவாலாக, பிரேசில் தேசத்தின் அடையாளமாக உருவெடுத்தது ஒரு சகாப்தம்.

1950ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் உருகுவே அணியிடம் பிரேசில் தோற்றது. பிரேசிலின் ஒரு மூலையில் இருக்கும் கடை ஒன்றில் ரேடியோ கமென்ட்ரி கேட்டுக்கொண்டிருந்த டான் டின்ஹோ சொந்த நாட்டின் தோல்வியை தாங்க முடியாமல் கதறி அழுதார். அருகில் இருந்த அவரின் 9 வயது மகன், “கவலைப்படாதீர்கள் அப்பா... நான் பெரியவனானதும் பிரேசிலுக்கு உலகக் கோப்பையை வாங்கித் தருவேன்” என்று சத்தியம் செய்தான். அதன்படி கால்பந்தில் சாதனை படைத்தார்.

* 3 முறை உலக கோப்பையை முத்தமிட்ட கருப்பு முத்து
பிரேசில் அணிக்காக 95 போட்டியில் விளையாடியுள்ள பீலே 77 கோல்களை அடித்திருக்கிறார். பிரேசிலில் 1940ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி பிறந்த பீலே இந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். தனது பதினைந்தாவது வயதில் சாண்டோஸ் அணிக்காக கால்பந்து விளையாட தொடங்கினார். சிறு வயதிலே பலரின் கவனத்தை ஈர்த்ததால் பிரேசில் தேசிய அணியில் தனது 16 வது வயதில் இடம் பெற்றார். தொடர்ந்து தனது 18 வது வயதில் 1958 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிய பீலே பிரேசில் அணிக்காக கோப்பையை பெற்று தந்தார். இதன் மூலம் இளம் வயதில் உலக கோப்பையை வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற பெருமையை பீலே பெற்றார்.

இதனை அடுத்து 1962ம் ஆண்டிலும் பிரேசில் உலக கோப்பை வெல்ல பீலே முக்கிய காரணமாக இருந்தார். அடுத்து இரண்டு உலகக் கோப்பையை தொடர்ந்து வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் பீலேக்கு சொந்தமானது. 1970 ம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடிய பீலே பிரேசில் அணிக்கு கோப்பையை வென்று தந்தார். இதன் மூலம் மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற சாதனை அவருக்கு சொந்தமானது. கால்பந்து ஆடுகளத்தில், உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களைக் கவர்ந்த ‘கருப்பு முத்து’ பீலே என்றென்றும் நினைவுகூறப்படுவார்.

* 3 திருமணம் 7 குழந்தைகள்
பீலே ஒரு கால்பந்து வீரரின் மகன். அவரது தந்தை டோண்டினோ ஃப்ளூமினென்ஸ் எஃப்சி மற்றும் அட்லெட்டிகோ மினிரோ உள்ளிட்ட பல கிளப்புகளுக்காக உள்நாட்டில் பிரேசிலில் விளையாடிய ஒரு மைய முன்னோக்கி ஆவார். பீலேக்கு மூன்று முறை திருமணமாகி இருக்கிறது. அவருக்கு மொத்தமாக ஏழு குழந்தைகள் உள்ளனர். பீலே 1966ல் ரோஸ்மெரி டோஸ் ரெய்ஸ் சோல்பியை முதல் முறையாக திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர், அவரது மூத்த மகள் கெல்லி கிறிஸ்டினா (பிறப்பு 1967) மற்றும் மகன் எட்சன் அக்கா எடின்ஹோ (பிறப்பு 1970). பீலே - ரோஸ்மெரி 1982 ல் விவாகரத்து செய்தனர்.

பின்னர் பிரேசில் பாடகியான அசிரியா நாசிமென்டோவை 2004ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். பின்னர் இரண்டாவது மனைவியையும் 2008 ல் விவாகரத்து செய்தார். பின்னர் 2016 ல் மார்சியா அயோகியை மணந்தார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இதைதவிர, தொலைக்காட்சி தொகுப்பாளர் க்ஸூக்ஸாவுடன் (1981 முதல் 1986 வரை) வாழ்ந்தார். 1964ல் வீட்டுப் பணிப்பெண்ணான அனிசியா மச்சாடோவுடனான உறவில் சாண்ட்ரா மச்சாடோ என்ற மகள் பிறந்தாள்.

* சொந்த ஊரில் இறுதிச்சடங்கு
எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ என்ற முழுப்பெயர் கொண்ட பீலேவின் இறுதிச் சடங்கு மற்றும் அடக்கம் சொந்த ஊரான சாண்டோஸில் நடைபெற உள்ளது. பீலே தனது வாழ்க்கையில் சில சிறந்த போட்டிகளில் விளையாடிய மைதானத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இறுதிச் சடங்கு நடைபெறும். சாவ் பாலோவுக்கு வெளியே உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று முறை உலகக் கோப்பை சாம்பியனைத் தாங்கிய சவப்பெட்டி திங்கள்கிழமை அதிகாலை சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு மைதானத்தின் மைய வட்டத்தில் ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அஞ்சலிக்கு பின்னர் சாண்டோஸில் உள்ள செங்குத்து கல்லறையான மெமோரியல் நெக்ரோபோல் எகுமெனிகாவில் அடக்கம் நடைபெறும். இதில். குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்வார்கள்.

Tags : Brazil ,Peele , Brazil legend Pele, hailed as the God of football, dies: Celebrities mourn; Fans are in tears
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...