×

இரட்டை சதம் விளாசினார் வில்லியம்சன்; நியூசிலாந்து 612/9 டிக்ளேர்: பாகிஸ்தானுக்கு நெருக்கடி

கராச்சி: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 612 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேன் வில்லியம்சன் இரட்டை சதம் விளாசி அசத்தினார். கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில்  438 ரன் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் பாபர் ஆஸம் 161, சர்பராஸ் அகமது 86, ஆஹா சல்மான் 103 ரன் விளாசினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய  நியூசிலாந்து  3வது நாள் ஆட்ட முடிவில்  6  விக்கெட் இழப்புக்கு 440 ரன் எடுத்திருந்தது.

வில்லியம்சன் 105, ஈஷ் சோதி 1 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு களமிறங்கிய இப்போட்டியில், வில்லியம்சன் எந்தவித அழுத்தமும் இல்லாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 7வது விக்கெட்டுக்கு 159 ரன் சேர்த்தனர். அரைசதம் விளாசிய ஈஷ் சோதி 65 ரன்னில் (180 பந்து, 11 பவுண்டரி) ஆட்டமிழ்ந்தார்.  அப்போது நியூசி. 7 விக்கெட் இழப்புக்கு  595 ரன் எடுத்திருந்தது.  அதன் பிறகு வந்த கேப்டன் டிம் சவுத்தீ,  நீல் வேக்னர்  ‘டக் அவுட்’ ஆகினர்.

ஆனாலும், மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய வில்லியம்சன் தனது 5வது  டெஸ்ட் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 200 ரன்னை எட்டியதும் நியூசி. 9 விக்கெட் இழப்புக்கு 612 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது (194.5 ஓவர்) வில்லியம்சன் 200 ரன் (395 பந்து, 21 பவுண்டரி, 1 சிக்சர்), அஜாஸ் படேல் (0) ஆட்டமிழக்காமல்  இருந்தனர். பாக்.  தரப்பில்  அப்ரார் அகமது 5, நவுமன் அலி 3 விக்கெட் அள்ளினர். வாசிம் 1 விக்கெட் வீழ்த்தினார்.

174 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான், 4ம் நாள் முடிவில்  2 விக்கெட் இழப்புக்கு 77 ரன் எடுத்துள்ளது (31 ஓவர்). இமாம் உல் ஹக் 45, நவுமன் அலி 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். பாக். இன்னும் 97 ரன் பின்தங்கியுள்ள நிலையில், பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

Tags : Williamson ,New Zealand ,Pakistan , Williamson scored a double century; New Zealand 612/9 Declare: Crisis for Pakistan
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.