×

33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும், 8 வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகளையும் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சிராப்பள்ளி, அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 42,081 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 2,548.04 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பு மற்றும் இதர பயன்கள் வழங்கப்படவுள்ள நிகழ்வில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு  மட்டும் 2764 மகளிர் சுயஉதவிக் குழுக்களின் 54,654 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 78 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு மற்றும் இதர பயன்களை வழங்கினார். மேலும், 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும், 8 வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகளையும் வழங்கி சிறப்பித்தார்.

கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார  மேம்பாடு  மற்றும்  தன்னம்பிக்கை  மூலம்  மகளிரின் நிலையை  மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சிகள் வழங்கி,  வலுவான சமுதாயம் சார்ந்த அமைப்புகளான ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றை உருவாக்கி,  வங்கிக் கடன் இணைப்புகளையும், தொழில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி,  பெண்களின் ஆற்றலை அதிகரித்து,  சுய உதவிக் குழு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் உன்னதப் பணியை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செய்து வருகிறது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில  ஊரக  வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர  வாழ்வாதார இயக்கம் மற்றும் தீன்தயாள்  உபாத்தியாய  கிராமப்புறத் திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தி எண்ணற்ற ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களால் 1989ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக தருமபுரி  மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு இயக்கம் தொடங்கப்பட்டது. தற்பொழுது தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஊரகம் மற்றும் நகர்ப்புரங்களில் உள்ள ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுய உதவிக் குழுக்கள் அடித்தட்டு மக்களின் நிறுவனமாக உருவாக்கப்பட்டு நிதி கட்டுப்பாடுகளை வரையறுத்து, ஜனநாயக முறையில் முடிவுகளை எடுக்க உதவுகிறது. மேலும், சுய உதவிக் குழுக்களிடையே முறையான கூட்டம் நடத்துதல், சேமித்தல், உள்கடன் வழங்குதல், கடன் திரும்ப செலுத்துதல் மற்றும் கணக்கு பதிவேடுகளை பராமரித்தல் ஆகிய ஐந்து கொள்கைகள் முறையாக  கடைபிடிக்கின்றன.
தமிழ்நாட்டில்  மொத்தம் 4.38 லட்சம் சுய உதவிக் குழுக்கள் கிராமப்புற  மற்றும்  நகர்ப்புறங்களில் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் 50.24 இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். சுய உதவிக் குழுக்களுக்கு 2021-22ம் ஆண்டு 20,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதைவிட அதிகமாக 4,08,740 சுய உதவிக் குழுக்களுக்கு 21,392.52 கோடி ரூபாய் கடனுதவியாக வழங்கி சாதனை புரிந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு 25,000 கோடி ரூபாய் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 16.12.2022 வரை 2,60,589 குழுக்களுக்கு ரூ. 14,120.44 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இலக்கை நிறைவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு மற்றும் இதர பயன்கள் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 42,081 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 2,548.04 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பு மற்றும் இதர பயன்கள் வழங்கப்படவுள்ள நிகழ்வில், இன்றைய தினம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு மட்டும் 2764 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 54,654 பயனாளிகளுக்கு 78 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு மற்றும் இதர பயன்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு மற்றும் இதர பயன்கள் வழங்கப்படும்.

சமுதாய அமைப்புகளுக்க மணிமேகலை விருதுகள்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்,  சிறப்பாக செயல்படக் கூடிய  சமுதாயம் சார்ந்த நிறுவனங்களான  ஊரகப் பகுதியின் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு,  வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புர பகுதியின்  சுய உதவி குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் 2006-2007ஆம் ஆண்டு மணிமேகலை விருதுகளை அறிவித்தார். இவ்விருதுகள் சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான  கூட்டமைப்புகளை மென்மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும் வகையில் தோற்றுவிக்கப்பட்டன.  

அதன்பிறகு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த இந்த விருதுகளை இன்று நடைபெற்ற அரசு விழாவில், 2021-22ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுகளை கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான விருதுகளை செங்கல்பட்டு மாவட்டம் - ஒட்டியம்பாக்கம், கன்னியாகுமரி மாவட்டம் - பேச்சிப்பாறை, நாமக்கல் மாவட்டம் - கொன்னையார்,  புதுக்கோட்டை மாவட்டம் - வடுகப்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் - கீழஈரால் ஆகிய ஊராட்சிகளுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் - இறச்சகுளம், காஞ்சிபுரம் மாவட்டம் - கீழ்கதிர்பூர், நாமக்கல் மாவட்டம் - கோணாங்கிபட்டி, புதுக்கோட்டை மாவட்டம் - ஆயன்குடி, திருப்பத்தூர் மாவட்டம் - தேவஸ்தானம் ஆகிய ஊரக கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கும்; செங்கல்பட்டு மாவட்டம் - விநாயகா, கோயம்புத்தூர் மாவட்டம் - ஜான்சிராணி, திண்டுக்கல் மாவட்டம் - ஜெயம், கன்னியாகுமரி மாவட்டம் - ஜுபிடர், நாகப்பட்டினம் மாவட்டம் - மஞ்சள் நிலா, தென்காசி மாவட்டம் - முல்லை, திருப்பூர் மாவட்டம் - ஸ்ரீ அம்மன், திருநெல்வேலி மாவட்டம் - வெக்காளி அம்மன், திருப்பத்தூர் மாவட்டம் - குறிஞ்சி மலர், விழுப்புரம் மாவட்டம் - டான்வா ஆகிய ஊரக பகுதிகளைச் சார்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும்;

கன்னியாகுமரி மாவட்டம் - நாகர்கோவில் நகர அளவிலான கூட்டமைப்பிற்கும், சென்னை - காவாங்கரை மற்றும் திருவாரூர் மாவட்டம் - அஷ்டலெட்சுமி ஆகிய நகர்ப்புற பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கும், அரியலூர் மாவட்டம் - ஜெய்குரு, கோயம்புத்தூர் மாவட்டம் - ஆச்சி, திண்டுக்கல் மாவட்டம் - அமிர்தாம்பாள், கன்னியாகுமரி மாவட்டம் - மல்லிகை, நாகப்பட்டினம் மாவட்டம் - பங்காரு அடிகள், நாமக்கல் மாவட்டம் - பேட்டை சுண்ணாம்புகாரத் தெரு, இராணிப்பேட்டை மாவட்டம் - அமுதம், தேனி மாவட்டம் - மதினா, திருவண்ணாமலை மாவட்டம் - சரோஜினி ஆகிய நகர்ப்புற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும்;

என மொத்தம் 33 சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் விருதுகளுக்கான 55 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

வங்கியாளர் விருதுகள்

சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அதிக வங்கிக் கடன்களை வழங்க வங்கியாளர்களை ஊக்குவிப்பதோடு வங்கிகளுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் விதமாக சிறப்பாக செயல்படும் வங்கிகள் மற்றும் கிளைகளுக்கான வங்கியாளர் விருதுகள் 2008-09 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பொதுத்துறை வங்கி, தனியார் துறை வங்கி மற்றும் கிராம வங்கி அல்லது கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட 3 வங்கிகளுக்கு விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருதுத் தொகையும், சுய உதவிக் குழுக்கள் / மகளிர் தொழில் முனைவோருக்கான சிறப்பு வங்கி கிளைகளில் சிறப்பாக செயல்படும் 2 வங்கிக் கிளைகளுக்கு விருது, சான்றிதழ் மற்றும் விருது தொகையும், சுய உதவிக் குழுக்கள் / மகளிர் தொழில் முனைவோருக்கான சிறப்பு வங்கிகள் அல்லாத இதர வங்கி கிளைகளுக்கான பிரிவின் கீழ் சிறப்பாக செயல்படும் 3 வங்கிக் கிளைகளுக்கு விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் விருது தொகையும் வழங்கப்படுகிறது.

2021-22ஆம் ஆண்டிற்கான வங்கியாளர் விருதுகள் - சிறந்த பொதுத்துறை வங்கிக்கான விருது இந்தியன் வங்கிக்கும், சிறந்த தனியார் வங்கிக்கான விருது எச்டிஎப்சி வங்கிக்கும்,  சிறந்த கிராம வங்கிக்கான விருது தமிழ்நாடு கிராம வங்கிக்கும், சுய உதவிக் குழுக்கள் / மகளிர் தொழில் முனைவோருக்கான சிறப்பு வங்கி கிளைகளில் சிறப்பாக செயல்பட்ட வங்கி கிளைகளுக்கான விருதுகளை இந்தியன் வங்கியின் காவேரிப்பட்டினம் மற்றும் சென்னை கிளைகளுக்கும்,  சுய உதவிக் குழுக்கள் / மகளிர் தொழில் முனைவோருக்கான சிறப்பு வங்கிகள் அல்லாத இதர வங்கி கிளைகளில் சிறப்பாக செயல்பட்ட வங்கி கிளைகளுக்கான விருதுகளை இந்தியன் வங்கியின் பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் கிளைகளுக்கும், தமிழ்நாடு கிராம வங்கியின் தருமபுரி கிளை ஆகிய வங்கி கிளைகளுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார். இவ்விருதுடன் பாராட்டுச் சான்றிதழ்களும், விருது தொகையாக 4 லட்சம்  ரூபாய்க்கான காசோலைகளும் வழங்கப்பட்டது.


Tags : Manimegal Awards ,Banker Awards ,G.K. Stalin , Chief Minister M.K.Stalin presented Manimegalai awards to 33 community organizations and banker awards to 8 banks.
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...