×

சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த 9 விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டின் இளைய சமுதாயத்தினர் நமது விஞ்ஞானிகளை தங்கள் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமையை ஏற்படுத்திக்கொடுத்த இனியும் ஏற்படுத்தி கொடுக்கப்போகிற அறிவியல் மேதைகளான இந்த 9 பேருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நேற்று உயர் கல்வி துறை சார்பில் நடைபெறும் “ஒளிரும் தமிழ்நாடு – மிளிரும் தமிழர்கள்” சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: இந்த மேடையில் நிற்பதையே நான் பெருமையாக கருதுகிறேன்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டும் இல்லை, தமிழனாக பிறந்த பெருமையை இன்றைக்கு நான் அதிகமாக அடைந்து கொண்டிருக்கிறேன். இந்தியாவின் பக்கம் உலகத்தையே பார்க்க வைத்த தமிழ்நாட்டு அறிவியல் மேதைகள் ஒன்பது பேர் இந்த மேடையில் அமர்ந்திருப்பது என்னுடைய உள்ளத்தை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு, நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு என்று பாடிய மகாகவி பாரதியார் இப்போது இருந்திருந்தால், இஸ்ரோ சிவனும், மயில்சாமி அண்ணாதுரையும் பிறந்த தமிழ்நாடு, நாராயணனும், சங்கரனும், ராஜராஜனும், ஆசீர் பாக்கியராஜும், வனிதாவும், நிகார் ஷாஜியும் பிறந்த தமிழ்நாடு, வீரமுத்துவேல் பிறந்த தமிழ்நாடு என்று பாராட்டி போற்றியிருப்பார்.

அந்தளவுக்கு உலகத்தையே இந்தியாவின் பெருமையை உணர்த்துகின்ற தமிழர்களாக நீங்கள் இங்கே உயர்ந்து நிற்கிறீர்கள். ஆகஸ்ட் 23ம் நாள் இந்தியாவுக்கு மட்டும் இல்லை, உலகத்துக்கே முக்கியமான நாள். நிலாவில் இந்தியா இறங்கிய நாள். சந்திரயான் விண்கலத்துடன் லேண்டரானது வெற்றிகரமாக நிலவில் இறங்கிய நாள். 1959ம் ஆண்டு சோவியத் ஒன்றியமும், 1964ம் ஆண்டு அமெரிக்காவும், 2013ம் ஆண்டு சீனாவும்தான் இந்த சாதனையை செய்திருக்கிறார்கள். 2023ம் ஆண்டில் அந்த சாதனையின் எல்லையை அடைந்திருக்கிறது.  மற்ற நாடுகளுக்கு இல்லாத சிறப்பையும் இந்தியா அடைந்திருக்கிறது. இதுவரை அறியப்படாத நிலவின் தென்துருவ பகுதியை சந்திரயான்-3 தரையிறங்கி ஆராய தொடங்கியிருக்கிறது. அந்த சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக இந்தியாவின் தென் பகுதியை சேர்ந்த, அதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல் செயல்படுத்திக் காட்டியது நமக்கெல்லாம் பெருமை.

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு இணையாக விண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப் பறக்கும் தமிழர்கள் என்ற செய்தி அதிகமாக பரவியது. இப்படிப்பட்ட பெருமையை தமிழ்நாட்டுக்கு தேடித்தந்த அறிவியல் மேதைகளான உங்கள் எல்லோரையும் தமிழ்நாடு முதல்வராக கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், போற்றுகிறேன். உங்கள் எல்லோரையும் வணங்குகிறேன். நம்ம தமிழ் அறிவு என்பதே அறிவியல் அறிவுதான். எதையும் பகுத்து பார்க்கும் பகுத்தறிவுதான் தமிழறிவு. நிலம் – தீ – காற்று – நீர் – வானம் – ஆகிய ஐந்தும் கலந்ததுதான் உலகம் என்று சொல்லியிருக்கிறது. நில அமைப்பை ஐந்தாக பிரித்து, பொருளை மூன்றாக பிரித்து வாழத் தொடங்கிய இனம் நம்முடைய தமிழினம். இதில் தமிழர்களுடைய வானியல் அறிவு தனித்தன்மை வாய்ந்தது.

சூரியனையும்-நிலவையும் வானத்தையும் பாடாமல் தமிழ் இலக்கியங்கள் இருந்தது இல்லை. இதையெல்லாம் நான் சொல்லக் காரணம், விருப்பு வெறுப்பற்ற அறிவியல் அறிவுதான் தமிழ்நாட்டின் அறிவாக இருந்தது. அதுதான் இந்த அறிவியல் மேதைகள் உருவாக்கி இருக்கிறது. இன்னும் சொன்னால், இந்த ஒன்பது பேரில் ஆறு பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள். அதுதான் மிகமிக பெருமைக்குரியது. மிகமிக சாதாரண ஊர்களில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, படித்து முன்னேறியவர்கள். முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருந்து விஞ்ஞானிகளாக உயர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக 2 பேர் பெண்கள். இந்த மேடையே சமூகநீதியின் அடையாளமாக இருப்பதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.

என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டு இளைய சமுதாயத்தினர் இவர்கள்தான் தங்களுடைய வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் இனத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன பெருமை என்றால் சந்திரயான்-1 திட்ட இயக்குநராக இருந்தவர் மயில்சாமி அண்ணாதுரை. 2008 அக்டோபர் 28ம் நாள் அது நிலவை சுற்றத் தொடங்கியது. நிலவில் நீர்க்கூறுகள் இருப்பதை அதுதான் கண்டறிந்து சொன்னது. சந்திரயான்-2, 2019 ஜூலை 15ம் நாள் ஏவப்பட்டது. இதனுடைய திட்ட இயக்குநராக வனிதா செயல்பட்டார். அந்த காலக்கட்டத்தில்தான் இஸ்ரோ தலைவராக டாக்டர் சிவன் இருந்தார். இப்போது ஏவப்பட்டது சந்திரயான்-3. இதனுடைய திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்.

இதுதான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இந்த பெருமையை தமிழ்நாடு அரசு போற்றும் விதமாக, இரண்டு அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன். முதல் அறிவிப்பு இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற அறிவியல் மேதைகளான இந்த ஒன்பது பேருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அறிவுக்கான அளவுகோல் எதுவுமில்லை. உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரத்தின் அடையாளமாகதான் தமிழ்நாடு அரசு இந்த தொகையை வழங்கியிருக்கிறது. இதை ஏற்றுக்கொண்டு, மேலும், மேலும் இந்தியாவிற்கு நீங்கள் பெருமை சேர்க்க வேண்டும்.

இரண்டாவது அறிவிப்பு என்னோட கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் ஏதோ பட்டம் வாங்கினால் மட்டும் போதும் என்று நினைக்காமல் கல்வியில், அறிவாற்றலில், சிந்திக்கின்ற திறனில், பன்முகத் திறமையில் சிறந்தவர்களாக அப்படி உருவாக்கத்தான் நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி நடத்திக்கொண்டு வருகிறோம். சென்ற ஆண்டு மட்டும் 13 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கி இருக்கிறோம். நம்முடைய மாணவர்களை அனைத்து திறமைகளும் கொண்டவர்களாக வளர்த்து வருகிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் தமிழ்நாட்டிற்கு தொழில் தொடங்க வருகிறார்கள்.

அதற்கு தகுதியானவர்களாக தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கி வருகிறோம். அதேபோல அறிவியல் திறனுள்ள மாணவர்களையும் உருவாக்க நினைக்கிறோம். அதற்கான அறிவிப்பை இந்த மேடையில் வெளியிடுவது மிகமிக பொருத்தமாக அமையும் என்று நான் கருதுகிறேன். பொறியியல் படிக்கின்ற மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு ஆர்வத்தை உருவாக்க இந்த திட்டத்தை செயல்படுத்தப் போகிறோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ், அரசின் கல்வி உதவித்தொகை பெற்று இளநிலை பொறியியல் படிப்பை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பை தொடர்கின்ற 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க இருக்கிறோம்.

இதன்மூலம் அவர்களுக்கு கல்வி கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் வழங்கப்படும். அந்த மாணவர்கள், அறிவியலாளர்களின் தலைமையில் அமைக்கப்படுகின்ற குழுக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த கல்வி உதவித்தொகைக்காக, ரூ.10 கோடியில் தொகுப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி. கிரிராஜன், துணை மேயர் மகேஷ் குமார், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் கார்த்திக், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் டி.ஜி.வினய், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

* உங்களால்தான் அறிவியல் துறையில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது
மேடையில் அமர்ந்திருக்கும் இந்த ஒன்பது பேரை பாராட்டுவது அவர்களை பாராட்டுவது மட்டும் இல்லை, அவர்களை போல ஆளுமைகள் இன்னும் அதிகமாக உருவாக வேண்டும் என்று ஊக்கப்படுத்தவும் தான் இந்த பாராட்டு விழா. இந்த நிகழ்ச்சியை 58 லட்சம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் காண்பதற்கான ஏற்பாடுகளை, நம்முடைய அரசு செய்திருக்கிறது. இதனை பார்த்துக் கொண்டிருக்கும் மாணவ கண்மணிகளே, உங்களை நான் கேட்டு கொள்வது, அறிவியல் ஆர்வத்தையும், ஆளுமை திறனையும் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய மாணவர் சமுதாயத்தில் இருந்து – இந்த மேடையில் இருக்கின்ற ஆளுமைகளை போன்ற அறிவியல் மேதைகள் உருவாக வேண்டும்.

அதுதான் இந்த திராவிட மாடல் அரசின் இலக்கு. அந்த வகையில், இங்கே அமர்ந்திருப்பவர்கள் அறிவியலாளர்களாக மட்டும் இல்லை, அறிவியல் வழிகாட்டிகளாகவும் இருக்கிறார்கள். இவர்களுடன் சேர்த்து, பல்லாயிரக்கணக்கான விஞ்ஞானிகள் – அறிவியல் ஆளுமைகள் – திறமைசாலிகளின் கூட்டு முயற்சியால் தான் இவை அனைத்தும் நிகழ்த்தி காட்டப்பட்டிருக்கிறது. அந்த வகையில், இன்றைய இஸ்ரோ தலைவர் மரியாதைக்குரிய சோம்நாத்துக்கும், என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் அனைத்து அறிவியலாளர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் தான் அறிவியல் துறையில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. நம்மை விட அதிகமான தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்ற நாடுகளில் இருக்கலாம். ஆனால், அதிகமான தொழில்நுட்ப அறிவு கூர்மை கொண்டவர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். பூமிக்கு அப்பால் உள்ள அனைத்து ஆராய்ச்சிகளும் தொய்வின்றி தொடரட்டும். சூரியன் பற்றியும், நிலாவை பற்றியும் எல்லா ஆய்வுகளும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன். மனிதரை விண்வெளிக்கு அனுப்புகின்ற வரை அனைத்து அறிவியல் முயற்சிகளும் வெற்றிகரமாக நடைபெறட்டும். இந்திய நாட்டை காப்போம்! நாட்டுக்கு அப்பால் உள்ள உலகத்தையும் கற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த 9 விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CM. G.K. Stalin ,Chennai ,India ,Tamil ,Nadu ,CM B.C. G.K. Stalin ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...