×

புளியந்தோப்பில் பரபரப்பு: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கணவன், மனைவி சடலங்கள் மீட்பு

பெரம்பூர்: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் தம்பதி சடலம் மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 6வது ெதருவை சேர்ந்தவர் சக்திவேல் (45). இவரது மனைவி துலுக்காணம் (35). இவர்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்று தெரிகிறது. தம்பதியினர் சென்னை அருகே மாங்காடு 128 வது வார்டில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றிவந்தனர்.

இந்த நிலையில், குழந்தை இல்லாத காரணத்தால் தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுவந்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு இருவரும் தூங்க சென்றனர். சில நாட்களாக அவர்களின் நடமாட்டம்  இல்லாததால் அக்கம்பக்கத்தினர் விசாரித்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை சக்திவேல் வீட்டில் இருந்து கடும்  துர்நாற்றம் வீசியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அப்பகுதியினர் கொடுத்த தகவல்படி, புளியந்தோப்பு போலீசார் விரைந்துவந்தனர்.
இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில் போலீசார், வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்தபோது அங்கு சக்திவேல் கயிற்றில் தூக்கில் பிணமாக கிடந்தார். அவரது மனைவி துலுக்காணம், கட்டிலில் படுத்த நிலையில் பிணமாக கிடந்தார். இரண்டு பேரின் உடல்களும் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘’கடந்த ஞாயிற்றுக்கிழமை தம்பதி இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சக்திவேல் தாக்கியதில் துலுக்காணம் கீழே விழுந்துள்ளார். இதில் காயம் அடைந்து உயிரிழந்திருக்கலாம். இதனால் ஏற்பட்ட பயத்தில் சக்திவேல் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம்’ என்று தெரிகிறது.

இதனிடையே குழந்தை இல்லாத விரத்தியில் துலுக்காணம் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் இதன்பிறகு சக்திவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‘’பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் இருவரின் சாவில் உள்ள மர்மம் தெரியவரும்’ என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Tags : Tamarindo , Turmoil in Tamarindo: Dead bodies of husband and wife recovered from rotting in locked house
× RELATED கஞ்சா விற்ற 4 பேர் கைது