×

இந்தியாவை சூழ்ந்துள்ள ஆபத்து வரலாற்று திரிபுதான் மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்: எம்சிசி கல்லூரி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இந்தியாவை சூழ்ந்துள்ள ஆபத்து வரலாற்று திரிபுதான். நாட்டில் மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று எம்சிசி கல்லூரி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை, கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்துவ கல்லூரியில், 81வது இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: இன்று நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்து வரலாற்று திரிபுதான். கல்வி, மொழி, பண்பாடு, அதிகாரம், பொருளாதாரம், நிர்வாகம் அனைத்திலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகள் காப்பாற்றப்பட வேண்டும். இத்தகைய சூழலில், இந்திய வரலாற்று காங்கிரஸ் போன்ற அமைப்புகளின் பணி மிக மிக முக்கியமானது.

1994ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை, நான் இங்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன். மதச்சார்பின்மை என்பது, நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை தன்மையாகும். எந்தவொரு கட்சியும் மதவாத கட்சியாக இயங்க அனுமதிக்க கூடாது. பல்வேறு மதங்களை பின்பற்றுபவர்களிடையே பிளவை உண்டாக்கி, அவர்களுக்குள்ளேயே படுகொலைகளை தூண்டுகிற சக்திகளை இயங்க அனுமதித்தால், ஜனநாயகமே இல்லாமல் போய்விடும். ஒரு மதச்சார்பற்ற அரசு அந்த சக்திகளை கட்டுப்படுத்தி அழித்து, சமுதாயத்தை முந்தைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.

தமிழ்நாட்டில் கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே, நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், எழுத்தறிவு மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது. சிவகளையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட, உமி நீங்கிய நெல்மணிகளின் காலம், கி.மு. ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்து என கண்டறியப்பட்டுள்ளது. தண் பொருநை என்று அழைக்கப்பட்ட, தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது, அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 7 இடங்களில், இதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை தமிழக அரசு தனிப்பட்ட முறையில் செய்யவில்லை. புனேயில் உள்ள இந்திய புவிகாந்தவியல் நிறுவனம் - பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் போன்ற நிறுவனங்களின் துணையோடு அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செய்கிறோம். கீழடியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழர்களின் கடல் கடந்த பயணம் மற்றும் அவர்களின் வெற்றிகளை ஆவணப்படுத்தும் விதமாக ஓர் அருங்காட்சியகம் அமைக்க இருக்கிறோம். பொருநை நாகரிகத்தை நெல்லையில் காட்சிப்படுத்த இருக்கிறோம்.

இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய வரலாற்று உணர்வை விதைத்திருக்கிறது. இந்த பெருமைகள் அனைத்தும் மதச்சார்பற்ற, அறிவியல் வழிபட்ட வரலாற்றை பற்றிய பெருமிதங்கள். இத்தகைய வரலாற்று உணர்வை - உண்மையான வரலாற்றை - ஆய்வின் அடிப்படையிலான வரலாற்றை, மக்களிடையே கொண்டு சேர்ப்பதை, தமிழ்நாடு அரசின் கடமையாக நினைத்து நாங்கள் செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், எம்பிக்கள்  டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா,  கருணாநிதி, ரூபி மனோகரன், உயர் கல்வி துறை செயலாளர் கார்த்திகேயன்,   கலெக்டர் ராகுல்நாத், கல்லூரி முதல்வர் வில்சன் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

* வரலாற்றை படிப்போம்; படைப்போம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறுகையில், ‘‘இந்திய துணை கண்டத்தின் வரலாறு பழந்தமிழக நிலப்பரப்பில் தொடங்கி எழுதப்படுவதுதான் முறையாக இருக்கும் என்று கருதுகிறோம். தமிழினத்தின் - தமிழ்நாட்டின் பெருமையை மீட்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. திராவிட கட்டிடக்கலையினை பறைசாற்றும் வானுயர கோயில் கோபுரங்கள் குறித்து பெருமை கொள்கிறோம். அதேபோல் கீழடியில் ‘ஆதன்’ என்றும் ‘குவிரன்’ என்றும் சங்ககால மக்கள் தங்கள் பெயர்களை எழுதிப்பார்த்த சின்னஞ்சிறு மண்பாண்டங்கள் குறித்தும் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இவற்றை மேலும் செழுமைப்படுத்திட, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை, இந்திய வரலாற்று காங்கிரஸ் அமைப்பு வழங்கினால், அதனையும் ஏற்று நாங்கள் செயல்படுத்த தயாராக இருக்கிறோம். தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயல் தொடர்பான வல்லுநர்களை உருவாக்க, இளங்கலை பட்டப்படிப்பை சென்னை கிறித்துவ கல்லூரி வழங்குகிறது என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வரலாற்றை படிப்போம், வரலாற்றை படைப்போம்’’ என்றார்.

Tags : India ,Chief Minister ,M.K.Stal ,MCC College , The danger surrounding India is historical distortion and everyone should strive to build a secular society: Chief Minister M K Stalin's speech at MCC College function
× RELATED தமிழையும், தமிழரையும் உண்மையாக...