×

போலி ஆவண பதிவுகளை ரத்து செய்யும் சட்ட திருத்தத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப பதிவுத்துறை ஐஜிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மோசடி ஆவணங்கள் பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள சட்டதிருத்தத்தை திறமையாக அமல்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு பதிவுத்துறை தலைவருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில், மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய கோரி மாவட்ட பதிவாளருக்கு புகார் அளிக்கப்பட்டது.இந்த புகாரை விசாரித்த மாவட்ட பதிவாளர், குறிப்பிட்ட அந்த ஆவணங்கள் மோசடியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பித்தபோதும், அதை ரத்து செய்வது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என்று உத்தரவிட்டார்.  

இந்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டை விசாரித்த கோவையில் உள்ள பதிவுத்துறை துணை தலைவர், சென்னையில் உள்ள பதிவுத்துறை தலைவரிடம் முறையீடு செய்ய உத்தரவிட்டார். இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பதிவு சட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொண்டுவந்த திருத்ததின் படி, மோசடியானவை என்று கண்டறியப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கும், பதிவு துறை துணை தலைவருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே,  மாவட்ட பதிவாளர் மற்றும் பதிவு துறை துணை தலைவரின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகிறது.   

தமிழக அரசின் சட்டத்திருத்தம் குறித்து மாவட்ட பதிவாளர் அறிந்து கொள்ளாமல் இருப்பது தீவிரமானது. அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம்.  தமிழக அரசின் சட்ட திருத்ததின் படி, மோசடியாக பதியப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள சட்டத் திருத்தத்தை திறமையாக அமல்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Tags : ICourt ,IG , Strict implementation of amendment to quash fake document registrations: Court orders IG of registration department to send report to authorities
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...