×

பாஜவில் இருந்து விலகல் புதிய கட்சி தொடங்கினார் ஜனார்த்தன ரெட்டி

பெங்களூரு: கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கிய முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி , வருகிற சட்ட பேரவை தேர்தலில் கொப்பல் மாவட்டம் கங்காவதி தொகுதியில் போட்டியிடுவதாகவும் அறிவித்தார். கர்நாடகாவில் பாஜ முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மீது அன்னிய செலாவணி மோசடி, இ.டி., கனிமவள சுரங்க மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவானது. சிறையில் அடைக்கப்பட்ட ஜனார்த்தனரெட்டி ஜாமீனில் வெளியே வந்த பிறகு பாஜ கட்சி விழாக்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார். சில வாரத்திற்கு முன்பு பேட்டி அளித்த போது இறுதிவரை பாஜவில் இருப்பேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் பெங்களூருவில் தனது அலுவலகத்தில் நிருபர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி நேற்று  கூறியதாவது:
‘பொது வாழ்வில் முழுமையாக ஈடுபடும் வகையில் கல்யாண ராஜ்ய பிரகதி கட்சியை தொடங்கியுள்ளேன். கட்சியின்கொடி, தொடக்க விழா குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். 2023 சட்ட பேரவை தேர்தலில் கொப்பள் மாவட்டம் கங்காவதி தொகுதியில் இருந்து போட்டியிட முடிவு செய்துள்ளேன். இதுதவிர வேறு எந்தெ்த தொகுதியில் கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவர் என்பதை விரைவில் முடிவு செய்து அறிவிப்பேன். புதிய கட்சி தொடங்கிய விஷயம் குறித்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட யாரின் ஆலோசனையும் பெறவில்லை.

எடியூரப்பாவை சந்தித்து பேசவும் இல்லை. பாஜ கட்சியில் இருந்து எனக்கு நெருக்கடி அளிக்கப்பட்ட போது முன்னாள் முதல்வர் எடியூரப்பா எனக்கு ஆறுதல் கூறினார். அதேநேரம் புதிய கட்சி தொடங்குவதற்கு எவ்வித அறிவுரையும் எடியூரப்பா வழங்கவில்லை. பாஜவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நான், மக்களின் நலனிற்காக புதிய கட்சியை தொடங்கியுள்ளேன்.   இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடக மாநில சட்ட பேரவையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் வரை உள்ளது. சட்ட பேரவை தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் போட்டியில் பாஜ, காங்கிரஸ், மஜத , ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஏற்கனவே வியூகம் அமைத்து களத்தில் தீவிரமாக செயல்படுகின்றன. இந்நிலையில் முன்னாள்அமைச்சர் ஜனார்த்தனரெட்டியின் புதிய கட்சி அறிவிப்பு மாநில அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. 2013ல் நடந்த சட்ட பேரவை பொது தேர்தலில் பாஜவில் இருந்து எடியூரப்பா வெளியேறினார். அதன் காரணமாக காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அது போல் தற்போது முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி புதிய கட்சி தொடங்கியுள்ளார். ஜனர்த்தன ரெட்டியின் புதிய கட்சி அறிவிப்பு பாஜவுக்கு சாதகமாக அல்லது பாதகமா என்பதை 2023 சட்டப்பேரவை தேர்தல் முடிவு செய்யும்.

Tags : Janardhana Reddy ,BJP , BJP, New Party, Janardhana Reddy
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...