ஊட்டி: கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு, பள்ளி அரையாண்டு விடுமுறை என தொடர் விடுமுறையால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது, பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் குளிரும் உள்ளதால், இந்த காலநிலையை அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் என தொடர் விடுமுறை காரணமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று முதல் ஊட்டியில் உள்ள லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிகின்றன. மேலும், ஊட்டி அருகேயுள்ள பைக்காரா படகு இல்லம், நீர் வீழ்ச்சி, சூட்டிங் மட்டம் போன்ற பகுதிகளும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களை கட்டியுள்ளது. ஊட்டி நகருக்குள் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்கள் வந்து செல்கின்றன. இரவு நேரங்களில் குளிர் வாட்டுவதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஸ்வெட்டர் மற்றும் சால்வைகளை அதிகளவு வாங்கிச் செல்கின்றனர். இதனால், வெம்மை ஆடை விற்பனையும் தற்போது சூடு பிடித்துள்ளது.
