×

இலங்கைக்கு எதிரான டி.20, ஒருநாள் தொடர்; இந்திய அணியை சேத்தன் சர்மா குழுவினரே தேர்வு செய்கின்றனர்.! புதிய தேர்வு குழு அமைப்பதில் தாமதம்

மும்பை: அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்த 8வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் இந்தியா மோசமாக தோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் இந்திய அணி வீரர்கள் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்தநிலையில் உலகக்கோப்பை தோல்வி எதிரொலியை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய அணியின் தேர்வு குழுவில் உள்ள அனைவரையும் நீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிரடி உத்தரவிட்டது. புதிய தேர்வு குழுவில் தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து முன்னாள் வீரர்கள் வெங்கடேஷ் பிரசாத், நயன் மோங்கியா, மனிந்தர் சிங், அதுல் வாசன், நிகில் சோப்ரா, அமய் குராசியா, ஞானேந்திர பாண்டே மற்றும் முகுந்த் பர்மர் ஆகியோருடன் தற்போதைய தலைவர் சேத்தன்சர்மா, மத்திய மண்டல உறுப்பினர் ஹர்விந்தர் சிங் உள்ளிட்டோரும் மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். புதிய தேர்வு குழுவுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான நேர்காணல் நாளை முதல் வரும் 28ம் தேதிக்குள் நடைபெறும் என தெரிகிறது. அதன்பிறகு தேர்வுகுழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விபரத்தை பிசிசிஐ அறிவிக்கும். ஆனால் இதற்கு ஒருவாரத்திற்கு மேல் ஆகும் என தெரிகிறது. இதனிடையே இலங்கை கிரிக்கெட் அணி  ஜனவரி முதல் வாரத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி.20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது.

இதில் டி.20 போட்டி ஜன. 3, 5 மற்றும் 7ம் தேதியும், ஒருநாள் போட்டி முறையே ஜன. 10, 12 மற்றும் 15ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. இந்த போட்டி ஜன.18, 21 மற்றும் 24ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்ய குறுகிய காலமே உள்ளது. அதற்கு முன் புதிய தேர்வு குழு அமைக்கப்பட வாய்ப்பு இல்லை. எனவே சேத்தன்சர்மா தலைமையிலான பழைய தேர்வு குழுவினரே இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய உள்ளனர். வரும் 29ம் தேதிக்குள் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.

Tags : T20 ,Sri Lanka ,Indian ,Sethan Sharma , T20I ODI series against Sri Lanka; The Indian team is selected by Chetan Sharma's team. Delay in formation of new selection committee
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு