×

டிபிஐ வளாகத்தில் நிறுவப்படும் பேராசிரியர் அன்பழகன் சிலை மாதிரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு: வடிவமைப்பு குறித்து ஆலோசனை

சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் நிறுவுவப்பட உள்ள பேராசிரியர் அன்பழகன் சிலை மாதிரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அவர் தமிழக பள்ளிக்கல்வித் துறையில் ஏற்படுத்திய சீர்திருத்தங்களை நினைவு கூரும்  வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித் துறை தலைமையகமான  டிபிஐ வளாகத்துக்கு, பேராசிரியர் அன்பழகன் வளாகம் என பெயர் சூட்டி,  பேராசிரியர் அன்பழகன் நினைவு வளைவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு சிலை நிறுவப்படும் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் அன்பழகனின்  முழு உருவ சிலை, திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு பகுதியில் உள்ள சிற்பி தீனதயாளன் சிற்பக்கூடத்தில் தயாராகி வருகிறது. 8.5 அடி உயர வெண்கல சிலை இங்கு தயாரிக்கப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக களிமண் மாதிரி சிலை தற்போது வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சிற்பி தீனதயாளன், சிற்பி கார்த்திகேயன் குழுவினர் இந்த சிலையினை தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். இந்த மாதிரி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, இந்த சிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள், ஆலோசனைகளை சிற்பிகளிடம் முதல்வர் தெரிவித்தார். குறிப்பாக, பேராசிரியர் அன்பழகன் சிலையில் மூக்கு கண்ணாடி கருப்பு நிறத்தில் இருந்த நிலையில் அதன் நிறத்தை பிரவுன் நிறத்தில் மாற்றுமாறு சிற்பிக்கு அறிவுறுத்தினார். மேலும், சிலை தயாரிப்பு  பணிகளுக்கு தேவைப்படும் காலம் குறித்தும் சிற்பியிடம் கேட்டறிந்தார்.  கண்ணாடி நிறத்தை மாற்றி முதல்வர் ஒப்பதல் பெற்ற பின்னர் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் வடிவத்திலும், அதனை தொடர்ந்து இரும்பு வடிவத்திலும் அச்சடித்து அதிலிருந்து வெண்கல சிலை வார்ப்பு பணிகள் நடைபெறும் எனவும், இந்த சிலை தயாரிப்பு பணிகள் முடிவடைய 2 மாதங்கள் ஆகும் எனவும் சிற்பிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி.ஜே.கோவிந்தராஜன், முன்னாள் செயலாளர் வி.ஏ.பி.சிவாஜி, பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், நகர செயலாளர் தமிழ் உதயன், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் வல்லூர் ரமேஷ் ராஜ், காணியம்பாக்கம் ஜெகதீசன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : Chief Minister ,M.K.Stal ,Anbazhagan ,TBI , Chief Minister M.K.Stal personally inspects the model of Prof. Anbazhagan statue to be installed in TBI campus: Advice on design
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...