நெல் கொள்முதல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்-தஞ்சாவூர் மாவட்ட ஆர்டிஓவிடம் விவசாயிகள் மனு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் ஆர்டிஓவிடம் மனு கொடுத்துள்ளனர்.தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆர்டிஓ ரஞ்சித் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள குறைகளை மனு மூலமாக கொடுத்தனர், இதில் காவிரி டெல்டா விவசாய சங்க தலைவர் ரவிச்சந்திரன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது,

திருவையாறு புறவழிச்சாலை அமைக்க ஒரு பைசா கூட விவசாயிகளுக்கு வழங்காமல் இழுத்தடிப்பு செய்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

மாவட்ட விவசாயிகளுக்கு உரிய காப்பீடு இழப்பு வழங்காமல் அக்ரோ இன்சூரன்ஸ் காப்பீடு நிறுவனம் கடந்த ஆண்டு வஞ்சித்துள்ளது, வன்மையாக கண்டிக்கிறோம்.

தாளடி நெல் பயிர்களுக்கு இழப்பீடாக திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.94. 56 கோடியும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.20. 29 கோடியும், அரியலூர் மாவட்டத்திற்கு ரூ.17.97 கோடியும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரூ.23.01 கோடியும், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ரூ.13.52 கோடியும் இழப்பீடு அறிவித்து விட்டு, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மட்டும் வெறும் ரூ.36 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட 7 கிராம விவசாயிகளை மட்டும் தேர்வு செய்து இழப்பீடு வழங்கி உள்ளது. இதில் முறைகேடு இருப்பதால், மேற்படி காப்பீட்டு நிறுவனம் மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவி்ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அய்யாரப்பன் கொடுத்த மனுவில்,தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி கூட்டு குடிநீர் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் குழாய் பதிக்கும் பணி நிறைவு பெற்ற நிலையில், நெடுஞ்சாலைத்துறை இப்போது சாலை அமைக்கும் பணியை தொடங்கி உள்ளது.

கல்லுகுடி, செம்மங்குடி ஆகிய 2 கிராமத்திலும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து, தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மருத்துவமனை இயங்க நடவடிக்கை தேவை

பாசனத்தாரர் சங்கத் தலைவர் தங்கவேல் கொடுத்த மனுவில், ஆம்பலாப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில் சுகாதார சித்த மருத்துவமனை இயங்கி வந்த சூழ்நிலையில், முறையான சுகாதார பராமரிப்பு இல்லாமல் மருத்துவமனை தற்போது இயங்காமல் உள்ளது. உடனடியாக மருத்துவர் நியமித்து மருத்துவமனை செயல்பட வேண்டும் என மனு அளித்தார்.

Related Stories: