×

தென்காசி ஆர்டிஓ அலுவலகத்தில் அசையும் பொருட்களை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு

*கோட்டாட்சியர் அவகாசம் கேட்டதால் கைவிடப்பட்டது

தென்காசி : நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் இழப்பீடு வழங்க தாமதம் செய்ததால் தென்காசியில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருட்களை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோட்டாட்சியர் சார்பில் அவகாசம் கேட்டதால் ஜப்தி நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த முகமது யூசுப் மற்றும் அவரது குடும்பத்தினர் 15 பேருக்கு சொந்தமான கடையநல்லூர் மெயின் ரோட்டில் உள்ள இரண்டு ஏக்கர் 9 சென்ட் நிலத்தை 1987ம் ஆண்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்காக கோட்டாட்சியர் அலுவலகம் மூலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது சென்ட் ஒன்றுக்கு ரூ.100 இழப்பீடாக நிர்ணயம் செய்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிமன்றம் சென்ட் ஒன்றுக்கு ரூ.2400 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டிய தொகையில் இதுவரை சுமார் ரூ.20 லட்சம் வரை வழங்கி உள்ளனர். மேலும் தற்போது வரை வட்டியுடன் சேர்த்து ரூ.44 லட்சத்து 15 ஆயிரத்து 704 வழங்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் கால தாமதம் செய்ததற்காக தென்காசி முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி கிரிஸ்டல் பபிதா கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் மனுதாரர்கள் இருவர் ஆகியோர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர்கள், பீரோ, மர டேபிள், டைப்ரைட்டிங் மெஷின் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோட்டாட்சியர் லாவண்யா நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக ஒரு மாதத்தில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது. இச்சம்பவம் கோட்டாட்சியர் அலுவலகப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post தென்காசி ஆர்டிஓ அலுவலகத்தில் அசையும் பொருட்களை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tenkasi RTO ,Kotaksiyar ,Tenkasi ,Kotakasi ,Dinakaran ,
× RELATED சிவகிரியில் விதிகளை மீறி குளத்தில் மண் அள்ளி செங்கல் சூளைகளுக்கு விற்பனை