×

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: 350 தேவாலயங்களில் இன்ஸ்பெக்டர் தலைமையில் கண்காணிப்பு; பைக் ரேஸ், ஈவ்டீசிங் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க தனிப்படை

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதோடு 350 தேவாலயங்கள் அமைந்துள்ள பகுதியில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தேவாலயங்களில் செய்யப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பொதுமக்கள் எந்தவித சிரமங்களும் இன்றி தேவாலயங்களுக்கு சென்று வழிபடவும், கூட்ட  நெரிசல் ஏற்பாடாதபடி அனைத்து ஏற்பாடுகளையும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி செய்யப்பட்டு வருகிறது.

தேவாலயங்களுக்கு, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்புக்காவும், கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணமும், இன்று இரவு முதல் நாளை வரை, கூடுதல் கமிஷனர்கள் அறிவுரையின்படி, இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், காவல்துறை பணிக்கு உதவியாக, ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
* கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இன்று இரவு முதல் பொதுமக்கள் தேவாலயங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்வதால், நாளை வரை சென்னையிலுள்ள சுமார் 350 தேவாலயங்களின் அருகிலும் சுழற்சி முறையில் காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் கண்காணிக்கவும், விரிவான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி தேவாலயம், பாரிமுனை அந்தோணியார் தேவாலயம், அண்ணாசாலை புனித ஜார்ஜ் (கத்தீட்ரல்), தேவாலயம், சைதாப்பேட்டை சின்னமலை தேவாலயம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவு கூடும் தேவாலயங்களுக்கு கூடுதலாக சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர்படுத்தும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* பொதுமக்கள் அதிகளவு கூடும் தேவாலயங்களின் அருகில் காவல் குழுவினர் மூலம் ஒலிப்பெருக்கியில் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும் கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணமும் அறிவுறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய சுற்றுக்காவல் வாகனங்கள் மூலம் தொடர்ந்து ரோந்து சுற்றி வரவும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற நபர்கள் பிக்பாக்கெட், திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடாதவாறு  கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* குற்றப்பிரிவு காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் சாதாரண உடையில் கண்காணித்து, திருட்டு, ஈவ்டீசிங் உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* முக்கிய சந்திப்புகளில் சிறப்பு வாகன தணிக்கைகள் மேற்கொள்ளவும், செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடாதவாறு கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்லும் பொதுமக்களை கடலில் இறங்காத வண்ணம் தடுக்கவும், அறிவுரைகள் வழங்கவும், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும், ஏடிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவல்துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள்
* கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மூலம் விரிவான பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* போக்குவரத்து காவல் ஆளிநர்கள் மூலம் தேவாலயங்களின் அருகில் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் மற்றும் சீரான போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* முக்கிய சந்திப்புகளில் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும், பைக் ரேஸ், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது, மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
* முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ள ஏஎன்பிஆர் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து தகுந்த ஆதாரத்துடன் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் அனுப்பவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


Tags : Chennai ,Christmas , Security arrangements intensified in Chennai ahead of Christmas: Inspector-led surveillance in 350 churches; Special force to prevent crimes like bike race, eve teasing
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...