×

எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது; அதிமுக போட்ட பிச்சையால் 4 இடங்களில் பாஜ வென்றது: அண்ணாமலைக்கு முன்னாள் எம்பி ஹரி பதிலடி

சென்னை: பாஜவின்  4  எம்எல்ஏக்களும் அதிமுக போட்ட பிச்சையால் வென்றனர் என்று அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள்  எம்பி ஹரி பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜ கூட்டணி அமைத்து கடந்த 2 பொதுத்தேர்தலில் போட்டியிட்டது. இந்த தேர்தல்களில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. சட்டமன்ற தேர்தலில் மட்டும் 4 பாஜ எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில், பாஜ தலைவர்கள் அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், ‘வருகின்ற தேர்தலில் பாஜ திமுகவுடன் கூட்டணி வைக்கப்போகிறது’ என்றார். இதற்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்தார். இது அதிமுக - பாஜ கூட்டணியில் விரிசலை மேலும் அதிகப்படுத்தியது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி நகர அதிமுக சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அதிமுக எம்பி ஹரி, பாஜவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். முன்னாள் எம்பி ஹரி பேசியதாவது:

எந்த காலத்திலும் பாஜவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 4 சட்டமன்ற தொகுதிகளை வென்ற பாஜ தன்னை எதிர்க்கட்சியாக நினைத்து கொண்டுள்ளது.  நாங்கள் (அதிமுக) எதிர்க்கட்சி இல்லையா. புண்ணாக்கு, வெறும் 4 எம்எல்ஏ அதுவும் அதிமுக போட்ட பிச்சை, குறிப்பாக எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சையால் அந்த 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 66 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் அதிமுக எதிர்க்கட்சி இல்லையா.

நாளிதழ்கள், மீடியாக்களில் தன் பெயர் வர வேண்டும் என்பதற்காகவே பாஜ தலைவர் அண்ணாமலை எதை எதையோ பேசி வருகிறார் என்று திருத்தணி ஹரி பேசியுள்ளார். அதிமுக முன்னாள் எம்பி ஒருவரே இப்படி பேசியுள்ளது, மீண்டும் அதிமுக - பாஜ கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Baja ,Intrastar Pitcha ,Hari ,Annamalai , No time can win; BJP wins 4 seats due to AIADMK begging: Former MP Hari hits back at Annamalai
× RELATED பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய வழக்கு; மேலும் 2 பேர் சரணடைந்தனர்