×

ரூ.22.84 கோடி மதிப்பில் நவீன மருத்துவ உபகரணத்துடன் 75 அவசரகால ஊர்திகள், ‘மனம்’ திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ரூ.22.84 கோடியில் 75 புதிய மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட 108 அவசரகால ஊர்திகளையும், 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ‘மனநல நல் ஆதரவு’ மன்றங்கள் அமைத்து, மாணவர்களின் மனநலம் காக்கும் ‘மனம்’ திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும், சென்னை அரசு மனநலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ரூ.22.84 கோடியில் 75 அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட புதிய அவசரகால ஊர்திகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்து, அவசரகால ஊர்திகளை பார்வையிட்டு, வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளிலும் ­­‘மனம்’ என்ற பெயரில் மருத்துவ மாணவர்களின் மனநலன் காக்கும் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு ‘மன நல நல்லாதரவு மன்றங்கள்’ அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மனநல நல்லாதரவு மன்றங்களில் மருத்துவக் கல்லூரி முதல்வர், மனநலத் துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களின் மன நலனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள்  மன நல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ‘மனம்’ அலைபேசி உதவி எண் 14416 பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பள்ளி மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்தும் ‘மனநல நல்லாதரவு மன்றங்கள் (மனம்)’ மற்றும் “நட்புடன் உங்களோடு  மனநல சேவை ” ஆகியவற்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டம் முதல்கட்டமாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டு பின்னர் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மன நல சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அரசு மனநல காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தை முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.

மேலும், மனநலம் மற்றும் நரம்புசார் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான மாநில அளவிலான தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற மையம், சென்னை அரசு மனநல மருத்துவமனையில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் , அரசு மனநலக் காப்பகம் தரம் உயர்த்தப்பட்டு, தமிழ்நாடு மன நலம் மற்றும் மூளை நரம்பியல் நிறுவனமாக தொடங்கப்பட உள்ளது. இங்கு கட்டப்படவுள்ள கட்டிடத்தின் முப்பரிமாண வரைபடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

குழந்தைகளுக்கான மன நலப் பிரிவு மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் மனநல சிகிச்சை பெறும் வகையில் தனிப் பிரிவு செயல்படும். ஆட்டிசம் சிகிச்சை, முதியோர் நலன், போதை மீட்பு சிகிச்சை, மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு மன நல சிகிச்சை ஆகிய சேவைகளும் இந்நிறுவனத்தில் செயல்படுத்தப்படும். மாநிலத்தின் எந்த பகுதியிலிருந்தும் மன நல ஆலோசனை பெற, தொலை மருத்துவத்திற்கான மின்னணு மையம் உருவாக்கப்படும்.

இந்த ஒப்புயர்வு மையத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், மன நல உளவியல் மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் மன நலப் பயிற்சி பெறும் வசதிகள் ஏற்படுத்தப்படும். பள்ளி மாணவர்களின் மனநல மேம்பாட்டிற்கான ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நல திட்டம் சம சயது பயிற்றுநர் பயிற்சிக் கையேட்டினை முதல்வர் வெளியிட்டார்.

முதல்வரிடம், மகப்பேறு சிக்கல்கள் உள்ள கர்ப்பிணி தாய்மார்களை கண்டறிந்து சிகிச்சை வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் விருதினை தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், காண்பித்து வாழ்த்துப் பெற்றார். மேலும், சுகமான மகப்பேறு நிலையங்களை (சுமன்) தேர்ந்தெடுப்பதில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் விருதினை மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநர் ஆகியோர் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்கள்.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல நிலைய பயன்பாட்டிற்காக மூன்று மின்சார மிதிவண்டிகளை ஏபிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியன் அரசு மனநல நிலைய இயக்குநரிடம் வழங்கினார்.

Tags : Manam ,CM ,Stalin , 75 ambulances with modern medical equipment at a cost of Rs 22.84 crore, 'Manam' project: Chief Minister M K Stalin launches
× RELATED நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடநாட்டில் 11செ.மீ. மழை பதிவு..!!