மாமல்லபுரத்தில் நாளை நாட்டிய விழா: நடைபாதையை ஆக்கிரமித்த 100 கடைகள் அகற்றம்

திருக்கழுக்குன்றம்: மாமல்லபுரத்தில் நாளை மாலை இந்திய நாட்டிய விழா துவங்குகிறது. இதைத் தொடர்ந்து, கடற்கரை செல்லும் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த 100க்கும் மேற்பட்ட கடைகளை இன்று காலை தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் இந்திய நாட்டிய விழா நடைபெறுவது மிக கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு இந்திய நாட்டிய விழா நாளை (23ம் தேதி) மாலை மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே துவங்குகிறது.

இவ்விழாவை முன்னிட்டு, நேற்று மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மாமல்லபுரத்துக்கு வந்து, நாட்டிய விழா மேடை அமைக்கும் பணி உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு, அப்பணிகளை விரைந்து முடிக்கவும், சிறப்பான ஏற்பாடுகள் செய்யவும் உத்தரவிட்டார். இந்நாட்டிய விழாவை காண இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். இதனால் மாமல்லபுரம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள சாலையோர கடைகளை அகற்ற செங்கை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கடற்கரை செல்லும் சாலை, அர்ஜுனன் தபசில் இருந்து வெண்ணெய் உருண்டை கல் பகுதி, கோவளம் சாலை பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன. இப்பணிகளில் திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: