×

'காலா பாணி'நாவலை எழுதிய எழுத்தாளர் மு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்.ஸுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!!

சென்னை: காலா பாணி நாவலை எழுதிய எழுத்தாளர் மு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்.ஸுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம் உள்பட 24 மொழிகளில் எழுதப்படும் சிறந்த இலக்கியம் சார்ந்து நாவல்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மு.ராஜேந்திரன் மதுரை மாவட்டத்தை சார்ந்த வடகரை கிராமத்தில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும் தமிழக வரலாற்றின் மீதும் பற்றுமிக்கவர்.

தமிழக வரலாற்று கால செப்பேடுகளை ஆய்வு செய்தல், ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளின் பிரதிகளை தேடியெடுத்து தொகுத்தல் போன்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்நிலையில், தமிழ் படைப்புக்காக 2022-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு மு.ராஜேந்திரன் எழுதியுள்ள காலாபாணி நாவல் தேர்வாகியுள்ளது. காளையார்கோவில் போரை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள வரலாறு காலா பாணி நாவல். மு.ராஜேந்திரன் ஏற்கனவே எழுதிய 1801 என்ற நாவலின் தொடர்ச்சியாகவே காலா பாணி நாவல் எழுதப்பட்டுள்ளது.

சிவகங்கை மன்னரும், வேலு நாச்சியார் மருமகனுமான வேங்கை பெரிய உடையணத் தேவன் பற்றியது காலா பாணி நாவல். நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை என்ற இந்த நாவலில் அன்றைய கால தமிழர்களின் வாழ்க்கை, சூழல், ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன என்பது தனிச்சிறப்பு. தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ராஜேந்திரன். இதற்கு முன்னர் தமது எழுத்துப் பணிக்காக டான்சீறி சோமா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Muhammad ,Rajendran I. , 'Kala Pani' Novel, Writer M. Rajendran, Sahitya Akademi Award
× RELATED அனைத்தும் எங்க கட்டுப்பாட்டில்...