×

சின்னக்குன்னூர் ஹெத்தையம்மன் கோயிலை திறக்க கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ஊட்டி : சின்னக்குன்னூர் பகுதியில் உள்ள ஹெத்தையம்மன்கோயிலை திறக்க கோரி எட்டு ஊர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கலெக்டரிடம் மனு அளித்தனர்.  
சின்னக்குன்னூர் பகுதியில் உள்ள ஹெத்தையம்மன் கோயில் மூடப்பட்டுள்ளதால், வரும் ஜனவரி மாதம் ஹெத்தையம்மன் கோயில் பண்டிகை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கோயிலை திறக்க கோரி நேற்று இப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து சின்னக்குன்னூர்‌ மற்றும் எட்டு ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில்‌ படுகர் இன மக்கள்‌ சுமார்‌ 380 கிராமங்களில் வசிக்கின்றனர். இதில்,‌ பெரும்பான்மை கிராமங்களில்‌ தங்கள்‌ குல தெய்வமான ஹெத்தையம்மன்‌ வழிபாடு, காலம்‌ காலமாக நடந்து வருகிறது. மேற்கண்ட 380 கிராமங்களில்‌ 16 கிராமங்கள்‌ மட்டும்‌ எங்கள்‌ மொழியில்‌ ‘உட்டு பன அக்க பக்க ஊர்‌’ என்னும்‌ மிகத்‌ தொண்மையான ஊர்கள்‌ ஆகும்‌. இதில், சின்னக்குன்னூர்ரும்‌ ஒன்று ஆகும்‌.

மேலும்‌, பேரகணி ஊர்‌, மற்றும்‌ எங்கள்‌ ஊர்‌ சின்னக்குன்னூர்‌  உட்பட ஏழு ஊர்களில் மட்டும் ஹெத்தை பண்டிகை ஏழு ஹெத்தை என்னும் சிறப்பு பெயருடன்‌ வெகு விமர்சியாக கொண்டடப்பட்டு வருகிறது. இந்த ஏழு ஊர்களுக்கும்‌ பக்தர்கள்‌ ஓரே நாளில்‌ பயணம்‌ செய்து காணிக்கை செலுத்துவது வழக்கம்‌.  இந்நிலையில், எங்கள்‌ ஊரில்‌ ஏற்பட்ட ஒரு சிறு பிரச்னையை காரணம் காட்டியும், ஒரு சில நபர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்த புகாரின் பேரில், தற்சமயம்‌ எங்கள்‌ ஊரில் அனைத்து கோயில்களும் மாவட்ட நிர்வாகத்தால் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால், வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறவிருக்கும்‌ ஹெத்தையம்மன் திருவிழாவிற்கு மற்ற ஊர்களில் இருந்து பொதுமக்கள் சின்னகுன்னூருக்கு வந்து ஹெத்தையம்மனை வழிப்பட முடியாத நிலை ஏற்படும். இதனால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்படும். ேமலும், கோயில் மூடப்பட்டிருக்கும் எட்டு நாட்களிலும் கோயிலுக்கு வரும் 8 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடியாத நிலை ஏற்படும். எங்கள் சமுதாய முறைப்படி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாங்கள் கட்டாயம் அன்னதானம் வழங்க வேண்டும். எனவே, சின்னக்குன்னூர் ஹெத்தையம்மன் கோயிலை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.



Tags : Chinnakunnur ,Hettiamman Temple , Ooty: Villagers of eight villages have approached the collector's office demanding the opening of the Hethiyamman temple in Chinnakunnur area.
× RELATED மஞ்சூர் ஹெத்தையம்மன் கோயில் திருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது