×

அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி கடைக்கோடியில் உள்ள கிராமத்திற்கும் அரசின் திட்டம் சென்றடைய வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

சென்னை: “அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி, அரசின்  திட்டங்கள் முழுவதும் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில்  செயல்படும் சுய உதவிக் குழுக்களையும் சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் தீனதயாள் உபாத்தியாய கிராமின் கவுசல்ய யோஜனா ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள், நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், தீனதயாள் உபாத்தியாய ஊரக திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டம் குறித்தும், சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன் இணைப்பு, சுழல் நிதி, இளைஞர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சிகள் குறித்தும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களை தேடி மருத்துவம் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆகிய திட்டங்களில் சுய உதவிக் குழு மகளிரின் பங்களிப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அடைய வேண்டிய இலக்குகள் குறித்தும், சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, அரசின் திட்டங்கள் முழுவதும் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் செயல்படும் சுய உதவிக் குழுக்களையும் சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும். சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பாக ரூ.25,000 கோடி வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைந்து அடைந்திட வேண்டும். தர மதிப்பீடு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கிட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரும் நடவடிக்கைகளில் அடைந்துள்ள இலக்குகளை விரைந்து அடைய வேண்டும்.

சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை சந்தைப்படுத்திடும் நடவடிக்கையில் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். திட்டத்தின் செயல்பாடுகளை சிறப்பாகவும், விரைவாகவும் செய்து முடிக்க அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இலக்கு மக்கள், நலிவுற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்களை உள்ளடக்கிய சுய உதவிக் குழுக்களை அமைத்திட அதிக அக்கறை காட்டிட வேண்டும். வங்கிக் கடன் இணைப்பு பெற்றுத் தரும் நடவடிக்கையில் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆய்வுக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சிறப்புச் செயலாளர் எம்.கருணாகரன் மற்றும் கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Katakodi ,Minister ,Udayanidhi Stalin , Govt's scheme should reach village in Katakodi by creating more women's self-help groups: Minister Udayanidhi Stalin orders officials
× RELATED திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை