×

தொட்டிபாளையம் ஊராட்சியில் சாலையோரம் குவிக்கப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு-விளைநிலங்கள் பாதிப்பு அபாயம்

பவானி : பவானி - அந்தியூர் ரோடு, தொட்டிபாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து, பவானி - மேட்டூர் ரோடு ஊராட்சி கோட்டை பஸ் நிறுத்தத்திற்கு இடையில் விவசாய நிலங்கள் வழியாக 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு தார் ரோடு  உள்ளது. இந்த ரோட்டின் இருபுறமும் மேட்டூர் மேற்குக்கரை வாய்க்கால் பாசன விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளன. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்போது அதிக அளவில் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் மேட்டூர் மெயின் வாய்க்கால் தொடங்கி வேதகிரிபுரம் சாய்பாபா கோயில் வரையில் ரோட்டோரங்களில், குடியிருப்பு பகுதிகளில் வெளியேற்றப்படும் கழிவுகள், வீடுகள் இடிக்கப்படும் போது பயனற்ற கட்டட இடிபாடுகள், தொழிற்சாலைகளில் எரிக்கப்படும் கரி, சாம்பல், விளைநிலங்களில் பயனற்ற தென்னை மரக்கழிவுகள், வாழை மரக்கழிவுகள் மற்றும் பிற கழிவுகளும் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

இதனால், இப்பகுதி முழுவதும் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் அவை காற்றில் அடித்து செல்லப்பட்டு விவசாய நிலங்களுக்குள் விழுவது அதிகரித்து வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும்,  இக்கழிவுகளில் தீ வைத்து எரிக்கப்படுவதால் கரும்புகை கிளம்பி சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.  காலை நேரங்களில் இந்த ரோட்டின் வழியாக அதிக அளவில் பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கழிவுகளால் துர்நாற்றம் ஏற்படுவதாகவும், கரும்புகையால் மூச்சு விட சிரமப்படுவதாகவும் நடைபயிற்சியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொட்டிபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல்,  பிற வெளியூர் பகுதிகளில் இருந்தும் வாகனங்களில் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இந்நிலை தொடர்ந்தால் இந்த சாலை பகுதியே குப்பை மேடாக மாறும் அபாயம் உள்ளது. விவசாய விளைநிலங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் பிற பகுதிகளில் இருந்து கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவதை தடுக்க வேண்டும். சுற்றுச்சூழலையும், சுகாதாரத்தையும்  பாதுகாக்க வேண்டும்.

இயற்கையான சூழலில் காணப்படும் இப்பகுதியை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை எடுத்துள்ளனர். மேலும் இங்கு கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Thanipalayam , Bhavani : Bhavani - Anthiyur Road, from Thanipalayam Bus Stand, between Bhavani - Mettur Road Panchayat Fort Bus Stand
× RELATED கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை