×

சிறப்பு திட்ட செயலாக்க துறை சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சிறப்பு திட்ட செயலாக்க துறை சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள் கடைகோடி மக்களையும்  சென்றடைய உரிய நடவடிக்கைகளை துறை அதிகாரிகள்  மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சிறப்பு திட்ட செயலாக்க துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின்போது, சிறப்பு திட்ட செயலாக்க துறையின் அரசு முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் இத்துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

சிறப்பு திட்ட செயலாக்க துறையானது அரசினால், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஆளுநர் உரை, முதல்வர் விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் வெளியிடப்பட்ட இதர அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை மற்றும் மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தின்போது அமைச்சரால் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலமாக ஆணை வெளியிடப்பட்ட விவரங்கள் மற்றும் அவற்றின் செயலாக்கத்தினை இத்துறை கண்காணிக்கும் முறை பற்றியும், துறைவாரியாக 2021-22, 2022-23ம் ஆண்டுகளில் இதுவரை வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு ஆணை வெளியிடப்பட்ட விவரங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு விவரிக்கப்பட்டது. திட்டங்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களை தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டங்களின் முன்னேற்றத்தை குறித்தும் அத்திட்டங்களினால் மக்களுக்கு ஏற்பட்ட பயன்கள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார். தகவல் தொழில்நுட்ப முன்னெடுப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘சிறப்பு திட்ட செயலாக்க துறை அரசின் கண்காணிப்பு அமைப்பாக  திறம்பட செயல்பட வேண்டும். அறிவிப்புகள் ஆணைகளோடு நின்றுவிடாமல் அவை கடைக்கோடி மக்களையும் சென்றைடையும் வகையில் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

முத்திரை பதிக்கும் முத்தாய்ப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த பல்வேறு சம்பந்தப்பட்ட துறைகளுடன் இத்துறை இணைந்து செயல்பட வேண்டும். அரசின் திட்டங்கள் வெற்றியடைய சம்பந்தப்பட்ட துறைகளை இத்துறை சிறப்பாக ஒருங்கிணைக்க வேண்டும். தகவல்தொழில்நுட்ப முன்னெடுப்புகளின் சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு அறிவிக்கும் பலன்கள் சென்று சேர்வதை இந்த துறை மேலும் முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும்’’ என்றார். இந்த கூட்டத்தில் சிறப்பு செயலாளர் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இன்னெசன்ட் திவ்யா மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Special Project Implementation Department ,Shopkodi ,Minister ,Udayanidhi Stalin , Notifications issued by the Special Project Implementation Department should be taken to reach the people of Katakodi: Minister Udayanidhi Stalin orders officials
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...