×

தமிழக எல்லையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்: 17 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!!

கோயம்புத்தூர்: தமிழக எல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது குறித்து. தமிழக மற்றும் கேரளாவை சேர்ந்த 17 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று தென்மண்டல தேசிய தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் மருந்து மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இரவு நேரங்களில் தமிழக எல்லை மாவட்டங்களில் கொட்டபடுவதாக தொடர்ந்து பூகார்கள் எழுந்துவருகின்றன.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் கடந்த ஆண்டு கேரளாவிலிருந்து எடுத்துவரப்பட்ட மருந்து மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டியதாக மூன்று லாரிகளை அப்பகுதிமக்கள் சிறைபிடித்தனர். இதேபோல் தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட எல்லை மாவட்டங்களிலும் மருந்து மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது.

இதனால் சுற்றுசூழல் மாசு அடைவதுடன் பலவகை நோய்களும் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இது தொடர்பான செய்திகளின் அடிப்படையில் சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நிபுணர் துறை உறுப்பினர் திரு. சத்தியகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

புகார்களின் தன்மை குறித்து ஆராய்ந்த நீதிபதிகள் நெல்லை,தென்காசி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, தேனீ, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களின் ஆட்சியர்களும் கேரளா மாவட்டத்தில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, திருச்சூர் மாவட்டங்களின் ஆட்சியர்களும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டது.


Tags : Tamil Nadu ,Green Tribunal , Coimbatore, Tamil Nadu Border, Green Tribunal
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...