×

வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டில் யானைகள் அட்டகாசத்தால் 25 ஆயிரம் ஏக்கர் நெல், வாழை, கரும்பு பயிர்கள் சேதம்: தமிழகம், ஆந்திரா, கர்நாடக அரசுகள் நடவடிக்கைக்கு கோரிக்கை

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டில் யானைகள், அட்டகாசத்தால் 25 ஆயிரம் ஏக்கர் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் காட்டில் பயிர்களை விளைவித்து நிரந்தர தீர்வு காண, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா அரசுகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆந்திரா, கர்நாடக மாநிலங்களையொட்டி தமிழகத்தின் வனப்பகுதியானது பல நூறு ஏக்கரில் உள்ளது.

இதில் குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், பேரணாம்பட்டு வனப்பகுதியானது, தமிழகத்திலேயே மிகப் பெரிய 2வது வனச்சரகமாக அமைந்துள்ளது. இருமாநிலங்களில் உள்ள வனப்பகுதியில் தண்ணீர் இன்றி வறட்சி நிலவுவதால் தான், இரு மாநிலங்களில் உள்ள வனப்பகுதியில் அடிக்கடி காட்டுயானைகள், மான்கள், போன்ற விலங்குகள் தண்ணீர் தேடி குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியையொட்டியுள்ள கிராமங்களான தனகொண்டலபள்ளி, கொட்டராமடுகு, சேம்பள்ளி, ஜிட்டப்பள்ளி, கொட்டமிட்டா, மோர்தானா, ஆம்பூரான்பட்டி, கல்லப்பாடி போன்ற கிராமங்களுக்கு படையெடுத்துவருகின்றன.

இதில் மான்கள் அடிக்கடி தண்ணீர் தேடி ஊருக்குள் வருவதால், நாய்களிடம் சிக்கியும், விபத்தில் சிக்கியும் பலியாகிறது. ஆனால், யானைகள், ஊருக்குள் நுழைந்தால் விவசாய நிலங்களான வாழைபயிர், நெற்பயிர், கீரை வகைகள், சோளம், மாங்காய், தக்காளி, கரும்பு போன்ற பயிர்களை மிதித்து நாசம் செய்கின்றன. இப்படி விவசாயிகளின் உழைப்பினை நெடிப்பொழிதில் வீணடிக்கும் காட்டு யானைகள் தொல்லையானது தொடர்கதையாகவே உள்ளது. இதில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையில் மட்டும் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமடைந்துள்ளதாக தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.  

ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர்- திருமலை- குப்பம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வனப்பகுதியும், கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்டம், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் என்று முக்கிய வனப்பகுதிகளில் இருந்து அங்குள்ள வனத்துறையினரால், பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகள் விரட்டியடிக்கப்படுகிறது. அங்கு விரட்டியடிக்கப்படும் யானைகள், தமிழக எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு வனப்பகுதிக்குள் நுழைந்துவிடுகின்றன.

விரட்டியடிக்கபட்ட யானைகள் பசிபோக்க, விளைநிலங்களில் உள்ள பயிர்களை உண்டது போக, மற்ற பயிர்களையும் நாசம் செய்துவிடுகிறது. இதனால் குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளிலும் யானைகள் பட்டாசு வெடித்து விரட்டியடிக்கப்படுகிறது. இப்படி 3 மாநில எல்லைகளில் மாறி, மாறி காட்டுயானைகள் விரட்டியடிக்கப்படுகிறது.

எனவே, இனியாவது 3 மாநில எல்லைகளில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகளுக்கு தேவையான உணவுகளை காட்டில் கிடைக்கும் வகையில், வனத்துறை மூலம் பயிர்களை வளர்த்து, யானைகள், மான் உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி செய்தாலே, மாநில வனப்பகுதிகளில் உள்ள விவசாயிகள், யானைகள் தொல்லைகளின்றி நிம்மதியாக விவசாயம் செய்து லாபம் ஈட்டுவார்கள் என்று சமூகஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இழப்பீடு சரியாக கிடைப்பதில்லை
குடியாத்தம் விவசாயிகள் கூறுகையில்:
யானைகள் அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்கிறது. இதற்கு, இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தால் சரியாக கிடைப்பதில்லை. வனத் துறையும், வருவாய் துறையும் போதிய நடவடிக்கையை எடுப்பதில்லை. இதில் ஒரு சில விவசாயிகள் அவர்களாகவே விதிகளுக்கு உட்பட்டு மின்வேலிகள் அமைத்துள்ளனர். எனவே வனப்பகுதிகளையொட்டியுள்ள அனைத்து விவசாய நிலங்களையும் பாதுகாக்கும் விதமாக யானைகள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

70 யானைகள் மின்சாரம் பாய்ச்சி பலி
வலசை பாதைகளின் ஆக்கிரமிப்பால் யானைகள் விளைநிலங்களில் புகுந்துவிடுகிறது. விளைநிலங்கள் சேதமடைவதால் மனிதர்களும் எல்லை மீறும் போது, யானைகள், மனித மோதல்கள் அதிகரித்து வருகிறது. இதில் விவசாய நிலங்களுக்கு யானைகள் புகுந்து விடுவதால் கடந்த 5 ஆண்டுகளில் 70க்கும் மேற்பட்ட யானைகள் மின்சாரம் பாய்ச்சி பலியாகியுள்ளது. இதில் கடந்த ஆண்டு தமிழகம்- ஆந்திரா எல்லை கிராமமான பரதராமி அருகே யானை மின்சாரம் பாய்ச்சி கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காட்டு யானைகள் பிரச்னைக்கு தீர்வு என்ன?
இயற்கை ஆர்வலர் கண்ணபிரான் கூறியதாவது:
யானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழைந்தால் விரட்டி அடிப்பதைவிட அவற்றை பிடித்து, யானைகள் காப்பகம் அமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை பெய்தாலும் தண்ணீர் தேங்குவதற்கு காட்டிற்குள் வசதிகள் இல்லை. இதனால் தண்ணீர் இன்றி வறட்சி நிலையாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக வனப் பகுதியில் பயிர்களை விளைவிப்பதற்கு வனத் துறை, போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை.

 வனப் பகுதியில் பயிர்கள் இருந்தால் யானைகள் அந்த பயிர்களை சாப்பிட்டு பசியாறும். வனப் பகுதியில் பயிர்களை விளைவிக்க அரசு போதுமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதுதவிர வன பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் வகையில் 10 முதல் 20 அடி ஆழத்தில் பள்ளங்களை வெட்ட வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் வனப் பகுதியில் பள்ளங்களை வெட்டவும், விதைகளை விதைத்து, பயிர்களை வளர்க்கவும், வனப்பகுதிகளில் ஹெலிகாப்டரில் விதைகளையும், விதைபந்துகளையும் மழைக்காலத்தில் தூவி பயிர்களை விளைவிக்க நடவடிக்கை எடுத்தால்தான் காட்டு யானைகள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும், என்றார்.

யானைகள் வராமல் தடுக்க 120 கி.மீட்டர் பள்ளம்
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘யானைகளால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டால் உரிய இழப்பீட்டை அரசு கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுத்து வருகிறோம். வனத் துறையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதுதொடர்பாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். விரைவில் வனச்சரகத்திலும் பலர் நியமனம் பெறுவர். அப்போது இதுபோன்ற பிரச்னைகள் தீரும். மேலும் குடியாத்தம் வனப்பகுதிகளையொட்டியுள்ள விளைநிலங்களையொட்டி 70 கி.மீட்டர் தூரத்திற்கும், பேரணாம்பாட்டில் 50 கி.மீ தூரத்திற்கும் யானைகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க பள்ளங்கள் தோண்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளங்கள் தற்போது தூர்ந்துபோயுள்ளது. அதனை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

வேட்டை தடுப்பு காவலர்கள் வேண்டும்
தமிழகத்தில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர் பணி உள்ளது. இவர்கள் பணியானது காட்டிற்குள் தங்கி வன பாதுகாப்பு மட்டுமின்றி, விலங்குகள், செடி, கொடி, மரங்கள் பாதுகாப்பு, முகாம்களில் தங்கி வேட்டைகள் தடுப்பது, வன உயிரினங்கள் மீட்பது, காட்டு தீ தடுப்பு உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்வர். இவர்களின் முக்கிய பணி ஆனது ஊருக்குள் வருகிற வன உயிரினங்களை காட்டுக்குள் திருப்பி அனுப்பி வைக்கும் பணிகளை வேட்டை தடுப்பு காவலர்கள் மேற்கொள்கின்றனர். அதன்படி குடியாத்தம் பேரணாம்பட்டு வன சரக்கத்தில் வேட்டை தடுப்பு காவலர்களை நியமித்தால் காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதை தவிர்க்கலாம் என்ற கோரிக்ைக எழுந்துள்ளது.

Tags : Kudiattam ,Peranambad ,Vellore district ,Tamil Nadu ,Andhra Pradesh ,Karnataka , Elephants rampage, 25 thousand acres of paddy, banana, sugarcane crops damaged, demand for permanent settlement
× RELATED சிறுமியின் திருமணம் தடுத்து...