×

150 ஆண்டுகளுக்கு முன்பு சோழ பேரரசரால் கட்டப்பட்ட பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் கோயிலை காணவில்லை: வடிவேல் பட காமெடி போல் சம்பவம்

சென்னை: வடிவேல் பட காமெடி போல், காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி திருமால்புரத்தில் இருந்த சுமார் 150 ஆண்டுகள் பழமையான தொன்மை வாய்ந்த பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் கோயிலை காணவில்லை என்று பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் புகார் அளித்துள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான பொன்.மாணிக்கவேல் அளித்துள்ள புகாரில் தெரிவித்திருப்பதாவது: 1,071ம் வருடம், அதாவது 151 ஆண்டுகள் தொன்மையான, பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் கோயில் சுமார் 40 வருடங்களுக்கு முன் கோவிந்தவாடி மக்கள் வழிபாட்டு வந்துள்ளனர். அந்த  கோயில் தற்போது காணவில்லை. நம் மண்ணிலிருந்து மறைந்தபோன இந்த மிக பெரிய நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ள வைணவர்களுக்கு இன்று வரை தெரியவில்லை.

இந்த கோயில் சம்மந்தப்பட்ட கல்வெட்டு 1906 வருடம். ஐரோப்பிய கிறிஸ்தவ கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் 115 வருடத்திற்கு முன்னாள்  கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சோழ பேரரசர் பராந்தக சோழரின் 12 முதல் 41வது ஆட்சி கால கல்வெட்டுகள் இக்கோயிலில் இருந்தன. இன்று இந்த வரலாற்று மற்றும் கலாசார பொக்கிஷமான இக்கல்வெட்டு நம்மிடம் இல்லாமல் நம் மண்ணிலிருந்து மறைந்து விட்டது. இந்தக் கோயிலில் இருந்த மணவாள பெருமாள் தெய்வ திருமேனியும் களவாடபட்டு கோவிந்தவாடி கிராமத்தில் கோயில் அடிச்சுவடு கூட தெரியாமல் காணாமல் போய் உள்ளது.

கோவிந்தவாடி கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருமால்புரத்தில் மணிகண்டேஸ்வரர் சிவன் கோயில் இன்றும் உள்ளது. சுமார் 30 முதல் 40 ஆண்டுகளில் மணிகண்டேஸ்வரர் சிவன் கோயில் திருப்பணி செய்யப்பட்ட அதே காலத்தில் நின்று அருளின பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் கோயிலிலும் திருப்பணி என்ற பெயரில் கோயிலில் உள்ள அனைத்து கல் மற்றும் செப்பு தெய்வ திருமேனிகளும் மற்றும் கல்வெட்டுகள் அடங்கிய கல் தூண்களும் கல் பலகைகளும் நலிவு அடைந்த நிலையில் இருந்ததால் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதாக கூறப்பட்டது.

அதற்கு பிறகு என்றுமே திரும்பி வரவில்லை என்றும் கிராமத்திலிருந்த 80 மற்றும் 90 வயதுள்ள முதியவர்களிடம் பேசியதிலிருந்து தெரிய வருகிறது. திருப்பணி என்ற பெயரில் காணாமல் போன இந்த குற்றத் தகவலை அன்றிலிருந்து நேற்று வரை இருந்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் காவல் நிலையத்தில் தகவல் கொடுக்காமல் மறைத்தது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். எனவே, இதுகுறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏடிஜிபி மற்றும் டிஜிபி அளவிலான அதிகாரிகள் இந்த வழக்கின் புலன் விசாரணை பொறுப்பை கையில் எடுத்து கொண்டு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு தந்தால்தான் இந்த மிக பெரிய சிலை திருட்டு குற்றத்தில் உண்மையை கண்டறிய முடியும்’ என அதில் தெரிவித்துள்ளார்.


Tags : Perumal Uiyachanda Alwar ,Chola , Perumal Uiyachanda Alwar Temple Built by Chola Emperor 150 Years Ago Missing: Vadivele Film Comedy Pol Incident
× RELATED ஒட்டக்கூத்தரும் தக்கயாகப் பரணியும்