×

இந்திய அளவில் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் முதலிடம் பிடித்தது தமிழகம்!: கேடயம் வழங்கி கௌரவித்தார் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா..!!

டெல்லி: இந்திய அளவில் தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. அனைத்து மக்களுக்கும் தரமான மற்றும் இலவச மருத்துவ சேவையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது அனைவருக்கும் நலவாழ்வு திட்டம், இதனை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ம் நாள் அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாம் விரும்பும் ஆரோக்கியமான எதிர்கால உலகத்தை அனைவருக்கும் உருவாக்குவோம் என்ற குறிக்கோளைக் கொண்டு உத்திரப்பிரதேசம், வாரணாசியில் அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தினம் கொண்டாடப்பட்டது.

ஒன்றிய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மாநிலங்களைச் சார்ந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள் மற்றும் பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் கௌரவிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் நலவாழ்வு மையங்களில் 12 அக்டோபர் முதல் 8 டிசம்பர் வரை 22,58,739 தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கியதில் சாதனை புரிந்து தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான பாராட்டுச் சான்றிதழும் கேடயமும் தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷ், இ.ஆ.ப அவர்களுக்கு ஒன்றிய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கி கௌரவித்தார்.

Tags : Tamil Nadu ,India ,Union Minister ,Mansukh Mandavia , Telecommunication, medical consultation, Tamil first
× RELATED இந்திய அளவில் மின்வெட்டு குறைவான...