×

இந்திய அளவில் மின்வெட்டு குறைவான மாநிலம் தமிழ்நாடு: ஒன்றிய அமைச்சர் பாராட்டு

சென்னை: கோடைகாலத்தில் வெயில் வாட்டி வதைப்பதால் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து, தமிழ்நாட்டில் மின்நுகர்வும் உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தின் தினசரி மின் நுகர்வு 40 கோடி யூனிட்டை தாண்டி பதிவாகி வருகிறது. இதற்கேற்ப தமிழகத்தின் மின்தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த மார்ச் 20ம் தேதி இதுவரை இல்லாத அளவாக 19,387 மெகாவாட்டாக மின்தேவை அதிகரித்தது.

அன்றைய தினம் 42.37 கோடி யூனிட்டாக மின் பயன்பாடு இருந்தது. தமிழகத்தில் மின்தேவை தினந்தோறும் புதிய உச்சத்தை அடைந்த போதும் அதனை சமாளித்து வருவதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் டெல்லியில் மின்துறை பகிர்மான நிறுவனங்களுக்கான ஆய்வு, திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு ஆய்வுக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தின் மின்சார வாரிய அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அதில் மின்சார வாரியத்தினுடைய வருங்கால திட்டங்கள் மற்றும் ஒவ்வொரு மாநிலமும் மின்சாரத் துறையில் செய்து வரும் சாதனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது “தமிழ்நாடுதான் நாட்டிலேயே, மின்தடை எண்ணிக்கை மற்றும் கால அளவு குறைவாக உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் மின்சார நம்பகத்தன்மை வளர்ந்த நாடுகளுடன் சமமானது’’ என ஒன்றிய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங், பாராட்டினார்.

The post இந்திய அளவில் மின்வெட்டு குறைவான மாநிலம் தமிழ்நாடு: ஒன்றிய அமைச்சர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Union Minister ,Chennai ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...