×

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் 13ம் தேதி உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் 13ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் புதுச்சேரி- மாமல்லபுரம்  இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில், சற்று மேற்கு நோக்கி புயல் நகர்ந்ததால் புதுச்சேரி-  மாமல்லபுரம்- மரக்காணம் இடையே நேற்று இரவு கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. சென்னையில் விடிய விடிய மழை கொட்டியது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இந்நிலையில், 13ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், டிசம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் மேலடுக்கு சுழற்சி தீவிரமடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. மாண்டஸ் புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, 9 கி.மீ. வேகத்தில் வேலூருக்கு 30 கி.மீ. தொலைவில் நகர்கிறது. கிருஷ்ணகிரிக்கு கிழக்கு வடகிழக்கில் 120 கி.மீ. தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது.

அடுத்த 12 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் வானிலை மாற்றத்தால் நாளை வடதமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 11ல் வடதமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழையும், அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


Tags : South Andaman ,Bay of Bengal ,India Meteorological Department Information , Bay of Bengal, Atmospheric Upper Circulation, India Meteorological Centre
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...