×

அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை அறியாமல் கடலில் குளிப்பதை தடுக்க வேண்டும்

*சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ராமேஸ்வரம் : அரிச்சல்முனை கடலில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகளை போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல் ஒன்றிணையும் அரிச்சல் முனை கடற்கரைக்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடல் அழகை ரசித்து கடலில் கால் நனைத்து விட்டு புகைப்படம் எடுத்து செல்கின்றனர்‌‌.

இங்கு எப்பொழுதும் பாக்ஜலசந்தி கடல் சீற்றம் இன்றி அமைதியாக காணப்படும்.ஆனால் மன்னார் வளைகுடா கடல் இதற்கு மாறாக பெரும் சீற்றத்துடன் அலைகள் சீறிப்பாயும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கடல் பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கும் அளவுக்கு கடல் அலைகள் தடுப்புகளை தாண்டி சாலைக்கு வந்தன. இந்த சூழலில் தற்போது கோடை காலம் என்பதால் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு கடலில் குளிக்க திட்டமிட்டு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஆபத்தை அறியாமல் கடலில் இறங்கி குளிக்கின்றனர்.

சுற்றுலா வாகனங்களில் வருவோர் அவர்களது விருப்பம் போல் ஆட்கள் இல்லாத பகுதிகளில் சாலையில் வாகனத்தை நிறுத்தி விட்டு கடலுக்குள் இறங்குகின்றனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் குளிக்க தடை என மரைன் போலீசார் சுற்றுலா பயணிகள் கூடும் அனைத்து இடங்களிலும் எச்சரிக்கை பலகைகள் வைத்துள்ளனர். ஆனால் இங்கு செல்பவர்கள் எதை பொருட்படுத்தாமல் குடும்பத்துடன் கடலில் இறங்கி ஆழமான பகுதிக்கு செல்கின்றனர்.

மேலும் சுற்றுலா வரும் இளைஞர்கள் எவ்வளவு தூரம் கடலின் ஆழமான பகுதிக்கு செல்லாம் என ஒருவருக்கொருவர் போட்டி போட்டு ஆபத்தாக நீந்துகின்றனர். இருகடலும் சங்கமிக்கும் அரிச்சல்முனை கடலுக்குள் நீரோட்டம் எப்பொழும் அதிகமாக இருப்பதால் ஆபத்தை அறியாமல் கடலில் இறங்கி குளிக்கும் சுற்றுலா பயணிகள் கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லும் அபாயம் உள்ளது. எனவே தனுஷ்கோடி அர்ச்சல்முனை கடலில் சுற்றுலா பயணிகள் கடலில் குளிப்பதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளது.

The post அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை அறியாமல் கடலில் குளிப்பதை தடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Arichalmunya ,Rameswaram ,Itchy Point ,Bay of Bengal ,Indian Ocean ,Dinakaran ,
× RELATED இலங்கையில் இருந்து அரிச்சல்முனைக்கு...