ஜோலார்பேட்டை அருகே வெங்காயப்பள்ளி புதிய ரேஷன் கடை கட்டிட திறப்பு விழா-எம்எல்ஏ பங்கேற்பு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே வெங்காயப்பள்ளியில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை எம்எல்ஏ க.தேவராஜி திறந்து வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் ஒன்றியம் வெங்காயப்பள்ளி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்குள்ள பொதுமக்கள் தமிழக அரசின் நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களை வாங்க அருகாமையில் உள்ள கிராமத்திற்கு சென்று வாங்கி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் அக்கட்டிடம் சிதலமடைந்த நிலையில் இருந்தது. இதனால் அங்கு இருப்பு வைக்கும் உணவுப் பொருட்கள் நாசமடையும் நிலை இருந்தது. விற்பனையாளர்களும் கட்டிடம் ஆபத்தானது என்பதால் கடையின் வெளியில் வைத்து பொருட்களை வினியோகம் செய்து வந்தனர்.

எனவே இக்கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்று, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான தேவராஜிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து புதிய ரேஷன் கடை கட்டிடத்துக்கு ₹12.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணி நடைபெற்றது. இப்பணிகள் முடிந்து நேற்று புதிய ரேஷன் கடை கட்டிட திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் அமலோற்பவம் தோமினிக் வரவேற்றார்.

 மாவட்ட கவுன்சிலர் சுபாஷ்சந்திரபோஸ், மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திருப்பதி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன், கூட்டுறவு சங்கத்தலைவர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை எம்எல்ஏ தேவராஜி திறந்து வைத்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் திருமலை, விற்பனையாளர் கார்த்திகா, துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

வாணியம்பாடி:

ஆலங்காயம் ஒன்றியம் ரெட்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராணிப்பேட்டை கிராமத்தில் நேற்று முன்தினம் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருப்பத்தூர் திமுக மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான தேவராஜி, பகுதிநேர ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததுடன், பொதுமக்களுக்கு சர்க்கரை வினியோகம் செய்து ரேஷன் கடையின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.

இதில், திமுக மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன், வழங்கல் துறை அதிகாரிகள், ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், திருப்பத்தூர் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கீடு

ஜோலார்பேட்டை ஒன்றியம் வெங்காயப்பள்ளி கிராம மக்கள் இறந்தவர்களின் சடலங்களை நீர்நிலை புறம்போக்கில் அடக்கம் செய்து வந்தனர். தற்போது நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதால் இறந்தவர்களின் சடலங்களை புதைக்க சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்று நேற்று எம்எல்ஏ தேவராஜியிடம் றகிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி இன்னும் இரண்டு வாரத்தில் சுடுகாட்டுக்கான இடத்தை ஒதுக்குவதாக எம்எல்ஏ தேவராஜி உறுதி அளித்தார்.

Related Stories: