×

திடியூரில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள்

*பாதுகாவலர்களாக மாறிய கிராம மக்கள்

நெல்லை : கூந்தன் குளம் பறவைகள் சரணாலயத்தைத் தொடர்ந்து திடியூர் கிராமத்தில் ஏராளமான வெளிநாட்டு பறவை இனங்கள் கூடுகின்றன. இதனால் கிராம மக்கள் கடந்த 4 ஆண்டுகளாக திருவிழாக்கள், சுபநிகழ்ச்சிகளை ஒலிபெருக்கிகள் இன்றி அமைதியாக நடத்தி வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கூந்தன்குளம் கிராமம், 1994ல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. கூந்தன்குளம், காடன்குளம் பகுதிகளில் இயற்கையாக அமைந்துள்ள நீர்ப்பரப்பில் 129.33 ஏக்கரில் பறவைகள் சரணாலயம் பரந்து விரிந்துள்ளது. இங்கு கிராம மக்களின் அரவணைப்பில் மரக்கிளைகளில் பறவைகள் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சுகளை பாதுகாத்துக் கொள்கின்றன. பறவைகளுக்காக இந்த கிராம மக்கள் பட்டாசு கூட வெடிப்பதில்லை. அந்த அளவுக்கு பறவைகளுக்கு பாதுகாப்பாக கூந்தன்குளம் கிராமமும், அங்குள்ள குளமும் திகழ்கிறது.

இந்த நிலையில் நெல் லை மாநகரில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள திடியூர் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வலம் வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் கூந்தன்குளத்திற்கு அடுத்தப்படியாக திடியூர் கிராமத்திலும் வெளிநாட்டு பறவை இனங்கள் அதிகளவில் கூடுவதாக பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.திடியூர் கிராமத்திற்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள 4 குளங்களுக்கு அருகே மரங்களில் ஏராளமான பறவைகள் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சுகளை பொரித்து வருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளன.

தற்போது திடியூர் பகுதியில் கூழக்கிடா, செங்கல்நாரை, நாமக்கோழி மற்றும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த வெளிநாட்டு பறவைகளும் அருகில் உள்ள காய்ந்த மரக்கிளைகளை எடுத்து கூடு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் வட்டமடிக்கும் விதவிதமான பறவையினங்கள் பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாடுகளில் இருந்து பறவைகள் திடியூர் கிராமத்திற்கு வலசை வருவதால் கிராம மக்கள் திருவிழாக்கள் மற்றும் வீட்டு சுபநிகழ்ச்சிகளைக்கூட ஒலிபெருக்கிகள் இல்லாமல் அமைதியான முறையில் நடத்தி வருகின்றனர். மேலும் அந்நியர்கள் பறவைகளை வேட்டையாடும் நோக்கில் நோட்டமிட்டாலும் அவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘மழைக்காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஏராளமான பறவையினங்கள் கிராமத்திற்கு வருகை தருகின்றன. ஆனால், குளங்களில் போதுமான தண்ணீர் இருப்பு வைக்க முடியவில்லை. இதனால் கோடையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

அருகில் பச்சையாறு நீர்த்தேக்கம் உள்ளது. அங்கிருந்து திடியூர் உள்ளிட்ட கிராமப்பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் திறந்து விட்டால் பறவைகளின் வருகையை அதிகரிக்க முடியும்.’ என்றனர்.பறவை ஆர்வலர்கள் கூறுகையில், ‘நெல்லை மாநகரத்திற்கு அருகே திடியூரில் பறவையினங்கள் கூடுவது நமக்கெல்லாம் மற்றுமொரு சிறப்பு. அவற்றை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றனர்.

The post திடியூரில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள் appeared first on Dinakaran.

Tags : Didyur ,Nellie ,Koonthan Kulam Bird Sanctuary ,Tidiyur ,Didiyur ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்