×

கூரைக்குண்டு, ரோசல்பட்டி ஊராட்சிகளில் குப்பை கிடங்குகளில் செயல்படும் மயானங்கள்: மாற்று ஏற்பாடுகள் செய்ய கோரிக்கை

விருதுநகர்: மாவட்டத்தில் கூரைக்குண்டு, ரோசல்பட்டி ஊராட்சிகளின் மயானங்கள் குப்பை கிடங்குகளில் செயல்பட்டு வருகின்றன. இதனால் சடலங்களை எரிக்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பிரச்னையில் உடனடியாக மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 450 கிராம ஊராட்சிகள் உள்ளன.

இவற்றில் குடிநீர், சாலை வசதி, வாறுகால், தெருவிளக்குகள், மயானங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக செய்து தராததால் நகர, கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். அடுத்ததாக தற்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு பகுதிகளிலும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் நகராட்சியை ஒட்டி உள்ள கூரைக்குண்டு, ரோசல்பட்டி, பாவாலி, சிவஞானபுரம், சத்திரரெட்டியபட்டி ஊராட்சிகளில் மயானங்களில் அடிப்படை வசதி குறைபாடுகள் அதிகமாக உள்ளன. இவற்றில் ரோசல்பட்டி ஊராட்சியில் 37 ஆயிரம் மற்றும் கூரைக்குண்டு ஊராட்சியில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த இரு ஊராட்சிகளின் பொது மயானங்கள் குப்பை கிடங்கு பகுதிகளில் அமைந்துள்ளன.

இதன்படி கூரைக்குண்டு ஊராட்சியின் பொதுமயானம் அல்லம்பட்டியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கிற்கு நடுவில் அமைந்துள்ளது. கூரைக்குண்டு ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதி குடியிருப்பு பகுதி மக்கள் இறப்பு நிகழ்ந்தால் சடலங்களை நகராட்சியில் குப்பை கிடங்களில் உள்ள கூரைக்குண்டு ஊராட்சி பொது மயானத்தில் எரித்து வருகின்றனர். குப்பைகளுக்கு நடுவில் சடலங்களை எடுத்து செல்லவும், எரிக்கவும் முடியாத சூழல் நிலவி வருகிறது. அத்துடன் இறந்த நபர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் மற்றும் வாரிசுகள் செய்ய வேண்டிய சடங்குகள் தொடர்பான காரியங்களுக்கு மக்கள் சென்று வரமுடியாத சூழல் பல ஆண்டுகளாக தொடர்கிறது.

நகராட்சி குப்பை கிடங்குகளில் கொட்டப்படும் குப்பைகள் ஒரு புறம் எரிக்கப்படும் போது கடுமையான புகை மண்டலம் உருவாகிறது. இதனால் அந்த நேரத்தில் சடலங்களை கொண்டு செல்வோர் புகையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். இதேபோல் ரோசல்பட்டி ஊராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய, குப்பைகளை கொட்ட இடவசதி இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த 6 ஆண்டுகளாக ஊராட்சியின் குப்பைகள் கேகேஎஸ்எஸ்என் நகரில் உள்ள பொது மயானத்தில் கொட்ட வேண்டிய சூழல் தொடர்கிறது. ரோசல்பட்டி ஊராட்சியில் சடலங்களை இறுதிக்காரியங்களை மேற்கொள்ள கொண்டு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இரு மயானங்களிலும் இரவு நேரங்களில் சடலங்களை கொண்டு செல்ல சாலை, மின்விளக்கு, தண்ணீர், இருக்கை உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. இப்பிரச்னை பல ஆண்டுகளாக நீடிப்பதால் இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று இரு ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பிரச்னை தொடர்பாக ரோசல்பட்டி ஊராட்சி தலைவர் தமிழரசி ஜெயமுருகன் கூறும்போது, மாவட்ட நிர்வாக ஒத்துழைப்பினால் தற்போது குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போதுள்ள மயான இடத்தில் மின்மாயனம் மற்றும் பொதுமயானம் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.

அடுத்ததாக கூரைக்குண்டு ஊராட்சி தலைவர் செல்வியிடம் இதுகுறித்து கேட்டபோது, நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கூரைக்குண்டு ஊராட்சி மயானம் இருப்பதால் அடிப்படை வசதிகளை நம்மால் செய்துகொடுக்க முடியவில்லை. நகராட்சி ஆணையரிடம், மாவட்ட நிர்வாகத்திடம் தற்போதுள்ள நகராட்சி இடத்தை எங்களுக்கு குத்தகைக்கு தரும்படி கேட்டு மனு அளித்துள்ளோம். கூரைக்குண்டு ஊராட்சியிடம் அந்த இடத்தை ஒப்படைத்தால்  அதில் மின்மயானம் அமைத்து, குப்பைகள் கொட்டி கிடக்கும் இடத்தை மயான பூங்காவாக மாற்ற தயாராக இருக்கிறோம் என்றார்.

Tags : Thakurkundu ,Rosalpatti , Rozalpatti panchayat, working cemeteries in the landfills,
× RELATED கூலி தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை