வடபழனியில் உள்ள அரசு கல்லூரி மாணவர் விடுதியில் 7 பேருக்கு திடீர் வயிற்றுப்போக்கு

சென்னை: வடபழனி திருநகரில் உள்ள அரசு கல்லூரி மாணவர்கள் விடுதியில் திடீரென 7 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து மாணவர் விடுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. சென்னை வடபழனி திருநகரில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 150 மாணவர்கள் தங்கி பல்வேறு அரசு கல்லூரிகளில் படித்து வருகின்றனர். 2 தினங்களாக விடுதியில் உள்ள மாணவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

பின்னர் நேற்று முன்தினம் இரவு விடுதியில் தங்கி இருந்த 4 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், விடுதி நிர்வாகிகள் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு நேற்று காலை 3 மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவர்களையும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த வடபழனி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மாணவர்கள் விடுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீரால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என உணவு மற்றும் குடிநீரை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், விடுதில் தங்கியுள்ள மற்ற மாணவர்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படாத வகையில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் விடுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: