×

பல மாதமாக பராமரிக்காத அவலம்; புல் வளர்ந்த கொள்ளிடம் ஆற்றுப்பாலம் சீரமைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைந்துள்ளது. கடந்த 1950 ம் ஆண்டு முதல் இந்த பாலத்தில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் முக்கிய வழித்தடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் சோதனை சாவடி அருகே இந்த பாலம் அமைந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்டுள்ள இந்த பாலம் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த பாலத்தின் வழியே இலகு ரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை 24 மணி நேரமும் சென்று கொண்டிருக்கிறது.

எண்ணிலடங்கா இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து சென்ற வண்ணம் இருந்து வருகின்றன. இந்த சாலையை ஒருபுறத்திலிருந்து மற்றொருபுறத்திற்கு கடந்து செல்ல வேண்டுமென்றால் வாகனங்கள் சென்று கொண்டிருப்பது சற்று நிறுத்தப்பட்டால் தான் சாலையை கடந்து செல்ல முடியும்.அந்த அளவுக்கு வாகனங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலை வழியே சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அனைத்து வாகனங்களும் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தை கடந்து சென்று வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இத்தனை ஆண்டுகளாக வலுவாக இந்த பாலம் இருந்து வருவதற்கு சிறந்த கட்டுமான பணியே காரணம் என்கின்றனர் பொறியியல் வல்லுநர்கள். இந்தப் பாலத்தை தொடர்ந்து பராமரித்து வந்தால் மேலும் பல வருடங்கள் பலம் குன்றாமல் இருந்து போக்குவரத்துக்கு பெரிதும் பயன்படும் என்றும் பொறியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த பாலம் கடந்த சில வருடங்களாக பராமரிக்கப்படாமல் இருந்து வருவதால் லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் மணல் ஏற்றி செல்லும் போதும், காற்றில் பறந்து வரும் மண் பாலத்தில் படுகின்ற போதும் பாலத்தின் ஓரத்தில் உள்ள நடைபாதையிலும் பாலத்தின் ஓரத்திலும் படிந்து விடுகிறது. இதனால் பாலத்தில் தேங்கும் மழை நீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் தானாகவே அடைக்கப்பட்டு விடுகிறது.

மழை பெய்யும்போது மழை நீர் பாலத்திலேயே தேங்கி விடுகிறது. வாகனங்கள் வருகின்றபோது இந்த தண்ணீர் பாலத்தின் நடைபாதையில் நடந்து செல்பவர்கள் மீது பட்டு அணிந்திருக்கும் உடைகள் மீது கறை ஏற்படுகிறது. இதனால் மழை பெய்யும் போது பாலத்தில் நடந்து செல்பவர்களும்,இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் பாலத்தில் தேங்கும் தண்ணீர் வெளியேற முடியாமல் பல நாட்கள் பாலத்திலேயே தேங்கி நிற்பதால் பாலம் வலு இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நெடுஞ்சாலைத் துறையில் உள்ள அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அவ்வப்போது முக்கியமான இந்த கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தை பார்வையிட்டு சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால் அதற்கு மாறாக இந்த பாலத்தை தூய்மை செய்ய தயங்கி வருகின்றனர். கடந்த வருடம் இந்த பாலத்தை தூய்மை செய்யாததால் பாலம் நெடுகிலும் உள்ள மண் குவியலை கடலூர் மாவட்டம் வல்லம்படுகையை சேர்ந்த தன்னார்வலர்கள், ஒரு பொறியாளர் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் வந்து சேவை மனப்பான்மையுடன் சுத்தம் செய்தனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தப் பாலத்தை முறையாக பராமரிக்காமல் விட்டு விட்டதால் பாலம் நெடுகிலும் மண் குவிந்து காணப்படுகிறது.

பாலத்தின் நடைபாதை யில் தொடர்ந்து மண் குவியலாக சேர்ந்துள்ளதால்.நடைபாதை முழுமையும் புல் முளைத்து மண்டி கிடக்கிறது. பாலத்தில் புல் முளைத்து இருப்பது அதிசயமாக இருக்கிறது என்று மக்கள் எள்ளி நகையாடி வருகின்றனர். அந்த அளவுக்கு கொள்ளிடம் ஆற்று பாலத்தை பாதுகாக்காமல் இருந்து வருவதால் பாலத்தின் ஆயுள் காலம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலம் முழுமையும் குவிந்துள்ள மண்ணை அகற்றிவிட்டு,பாலத்தில் தேங்கும் மழை நீரை அவ்வப்போது உடனடியாக வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தினந்தோறும் பாலத்தை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Tags : Kollidam river , Untreated for months; Will the overgrown Kollidam river bridge be repaired?: public expectations
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...