இரண்டு அணிகளாக செயல்பட்டு வரும் இபிஎஸ்-ஓபிஎஸ்சை இணைக்க தமிழக கவர்னர் முயற்சி?

சென்னை: இரண்டு அணிகளாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை இணைக்க தமிழக கவர்னர் முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது அணியை பலப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்துக்கும் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

அதே நேரம் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கட்சிக்குள் இருந்து கொண்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை, கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். இதனால் தொண்டர்கள் செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர். அதிமுக உட்கட்சி பிரச்னை குறித்து டெல்லி பாஜ தலைமையிடம் புகார் தெரிவிக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பலமுறை தனியாக டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால், இவர்களை சந்திக்க இரண்டு தலைவர்களும் மறுத்து விட்டனர்.

கடந்த வாரம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகம் வந்தபோது கூட எடப்பாடியும், ஓபிஎஸ்சும் இரண்டு பேரையும் தனியாக சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால், இரண்டு பேரையும் விமான நிலையம் வரும்போது பார்வையாளர்களை பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, பூங்கொத்து வாங்கி விட்டு பிரதமர் மோடி சந்திக்காமலே சென்று விட்டார். அமித்ஷாவும் இதையே கடைபிடித்தார்.

இதனால் எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் விரக்தியில் உள்ளனர். கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக தனிக்கட்சி, பாஜ தனிக்கட்சி. நாங்கள் ஏன் மோடி, அமித்ஷாவை சந்தித்து பேச வேண்டும். பிரதமர் தமிழகம் வரும்போது எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அவரை வரவேற்றேன் என்று கூறி தனது அதிருப்தியை வெளியிட்டார். இது பாஜ தலைவர்களை கோபம் அடைய செய்துள்ளது.

அதேநேரம், டெல்லி மற்றும் தமிழக பாஜ தலைவர்கள் எடப்பாடி, ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில் தனித்தனியாக இருந்தால் தமிழகத்தில் நடைபெறும் எந்த தேர்தலிலும் வெற்றிபெற முடியாது. ஒருங்கிணைந்த அதிமுக, அதாவது எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் இணைந்து மீண்டும் செயல்பட்டால் மட்டுமே பாஜவுக்கு லாபம் என்று கருதுகிறார்கள். ஆனால் இதற்கு எடப்பாடி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். அதனால்தான் எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோரை தனித்தனியே சந்திக்க டெல்லி பாஜ மேலிட தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட பலரும் சென்றனர். கவர்னரை பார்த்து விட்டு வெளியே வந்த எடப்பாடி, திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, மனுவாக அளித்துள்ளோம் என்று நிருபர்களிடம் கூறினார். ஆனால், உண்மையில் கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பின் பேரிலேயே எடப்பாடி பழனிசாமி அவரை சந்திக்க சென்றதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அதிமுக முக்கிய பிரமுகர் ஒருவர் கூறியதாவது: அதிமுகவில் தற்போது இபிஎஸ், ஓபிஎஸ் கோஷ்டி மோதல் உச்சத்தில் உள்ளது. இதனால் அதிமுகவுக்கும், கூட்டணி கட்சியான பாஜவுக்கும் எந்த பயனும் இல்லை. தங்களது சொந்த செல்வாக்கை நிரூபிக்க இரண்டு தலைவர்களும் முயற்சி செய்து வருகிறார்கள். இதனால் கட்சிக்கு எந்த லாபமும் இல்லை. அதனால்தான் பாஜ மேலிட தலைவர்கள் உத்தரவின் பேரிலேயே எடப்பாடி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்து பேசினார். கவர்னர் மூலம் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலரது மேல் பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்தையும் வருமான வரித்துறை தகுந்த ஆதாரத்துடன் கையில் வைத்துள்ளது. இதை வைத்துதான் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, எடப்பாடி அணியை மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாஜ மேலிடம் கூறுவதுபோல், எடப்பாடி அணியினர் ஓபிஎஸ்சுடன் இணைய வேண்டும். அப்போதுதான் தேர்தலில் வெற்றிபெற முடியும். இல்லையென்றால் அதிமுக ஆட்சியின் ஊழல் அனைத்தும் வெளிச்சத்துக்கு வர வாய்ப்புள்ளது. கவர்னர் என்ற முறையில் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டு விடும். அதனால் இரண்டு பேரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று உறுதியாக கவர்னர் சொல்லி அனுப்பியுள்ளார் என்றார்.

ஏற்கனவே 2016ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி பழனிசாமியும் - ஓ.பன்னீர்செல்வமும் பிரிந்து இருந்தனர். அப்போதும் டெல்லி பாஜ மேலிட தலைவர்கள் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மூலம்தான் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் இருவரின் கரங்களை பிடித்து கைகுலுக்க வைத்த சம்பவம் தமிழகத்தில் நடந்தது. அதே முறையை மீண்டும் தமிழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மூலம் அரங்கேற்ற டெல்லி பாஜ மேலிட தலைவர்கள் முயற்சி செய்து வருவது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

Related Stories: