உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே ஆளுநரை எடப்பாடி சந்தித்திருக்கிறார்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து பொய்யான புகார் மனுவை திருக்கிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எடப்பாடி பழனிசாமி கொடுத்த புகார்கள் அனைத்துமே ஆதாரமே இல்லாதவை. துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை கொன்றவருக்கு, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையே டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாக சொன்ன எடப்பாடி பழனிசாமிக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு எல்லாம் உரிமையே கிடையாது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் கொலைகள், பொள்ளாச்சி சம்பவம் யார் ஆட்சியில் நடந்தது என்பதை மறந்துவிட்டாரா எடப்பாடி பழனிசாமி? ஆனால் எடப்பாடி பழனிசாமி புளுகுமூட்டைகளின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

மழைவெள்ள பாதிப்பு, கோவை சம்பவங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் குவிகின்றன. இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் காந்தாரி போல ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியிருக்கிறார் இபிஎஸ். அதிமுகவின் உட்கட்சி பூசலில் பாஜவின் ஆதரவைப் பெறத்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. பாஜவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலை திசைதிருப்பும் கருவியாக எடப்பாடி பழனிசாமி - ஆளுநர் சந்திப்பு அமைந்திருக்கிறது. ஆளுநரை இபிஎஸ் சந்தித்ததே ஒரு நாடகம்தான். தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு கையில் ஆதாரம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்துக்குப் போகலாம். தமிழகத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளது என பொய்யான தகவலை பரப்பிவிடுகிறார். மருந்து தட்டுப்பாடு எங்கும் இல்லை.  

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை பொறுத்தவரை அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு, மாநிலம் முழுவதுமாய் சீர்குலைந்து விட்டது போல மாயத் தோற்றம் உருவாக்க முயல்கிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவம் எல்லாம் யார் ஆட்சியில் நடந்தது என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் சிறப்பான ஆட்சி மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் இபிஎஸ்-ன் இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் நிராகரிப்பார்கள். இவ்வாறு தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

Related Stories: