×

தெலங்கானாவில் பரபரப்பு; அமைச்சர் வீடு உள்பட 50 இடங்களில் 2வது நாளாக இன்றும் ஐ.டி. ரெய்டு: மருத்துவமனையில் அமைச்சர் மகன் அனுமதி

திருமலை: தெலங்கானாவில் அமைச்சர் மல்லாரெட்டி வீடு உள்பட 50 இடங்களில் 2வது நாளாக இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது, அமைச்சரின் மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) ஆட்சி செய்து வருகிறது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் மல்லாரெட்டி. தற்போது ரங்காரெட்டி மாவட்டத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மேலும் அமைச்சர் மல்லாரெட்டிக்கு சொந்தமான மருத்துவ பல்கலைக்கழகம், இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துவக்கல்லூரி என 14 கல்லூரிகள், இவரது சகோதரர்கள் மற்றும் அமைச்சரின் மகன் மகேந்திரரெட்டி, மருமகன் ராஜசேகர் மற்றும் உறவினர்கள் என 50 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். நள்ளிரவு 12 மணி வரையும் சோதனை நடந்தது.

இதில் கணக்கில் வராத சுமார் ரூ.10 கோடி மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்துள்ளனர். இன்று காலை 2வது நாளாக அமைச்சரின் வீடு, பல்லைக்கழகம், கல்லூரிகள் மற்றும் மகன், மருமகன், உறவினர்கள் என 50 இடங்களில் சோதனை நடத்தினர். மல்லாரெட்டிக்கு 14 கல்லூரிகள் உள்ளது. ஒரு பல்கலைக்கழகம், மருத்துவமனை, ரியல் எஸ்டேட் ஆகியவை இருந்து வரும் நிலையில், அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வரிஏய்ப்பு செய்தது தெரியவந்தது.

இன்று காலை அவரது மகன் மகேந்திரரெட்டி வீட்டில் இருந்து 2 டிஜிட்டல் லாக்கர்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதனை திறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சரின் மகன் மகேந்திரரெட்டிக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை வருமானவரி துறை அதிகாரிகள், அமைச்சருக்கு சொந்த மருத்துவமனையிலேயே சேர்த்தனர்.

Tags : Telangana ,Minister's House ,Raid , Agitation in Telangana; 50 places including the Minister's House today for the 2nd day. Raid: Minister's son admitted to hospital
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து