மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு கோவையில் ஷாரிக் தங்கிய லாட்ஜில் தனிப்படை ரெய்டு: உடனடியாக மூடப்பட்டது

கோவை: மங்களூர் குண்டு வெடிப்பு குற்றவாளி ஷாரிக் கோவையில் தங்கிய லாட்ஜில் தனிப்படை போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். இதையடுத்து அந்த லாட்ஜ் மூடப்பட்டது. கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்து, அதில் பயணம் செய்த முகமது ஷாரிக் (24) மற்றும் டிரைவர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் முகமது ஷாரிக் பயன்படுத்திய சிம்கார்டு கோவையில் புதிதாக வாங்கியது போலீசாருக்கு தெரிய வந்தது. ஊட்டியை சேர்ந்த சுரேந்திரன் (28) என்பவரின் பெயரில் அந்த சிம்கார்டு பெறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஊட்டி போலீசார் சுரேந்திரனிடம் விசாரணை நடத்தினர். இதில் சுரேந்திரன் கோவை சிங்காநல்லூரில் தங்கி தனியார் பள்ளியில் கால்பந்து பயிற்சியாளராக வேலை செய்தது தெரியவந்தது. இவர் அடிக்கடி கோவை காந்திபுரத்தில் உள்ள லாட்ஜிக்கு சென்று மதுபானம் குடித்து வந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் சுரேந்திரன் அந்த லாட்ஜில் தங்கி இருந்தபோது பக்கத்து அறையில் முகமது ஷாரிக் தங்கி இருந்துள்ளார். அவர் தன்னிடம் செல்போன் இல்லை என்று கூறி சுரேந்திரனிடம் வாங்கி சிலரிடம் பேசியுள்ளார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், முகமது ஷாரிக் சிம்கார்டு வாங்க உதவி கேட்டார். அதன்படி அவர் தனது ஆதார் கார்டை தந்து சிம்கார்டு வாங்க உதவியுள்ளார். அதன் பின்னர் புதிதாக செல்போன் வாங்கி பேசி வந்துள்ளார். பின்னர் அவர் கோவையில் இருந்து மதுரை சென்று விட்டார். அங்கே ஒரு நாளும், நாகர்கோவிலில் 2 நாளும் தங்கியுள்ளார். அவர் தமிழகத்தில் தங்கி இருந்தபோது யாரெல்லாம் சந்தித்தார்?, என்ன சதி திட்டம் தீட்டப்பட்டது?, இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என கோவை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்காக கோவையிலிருந்து தனிப்படை போலீசார் மங்களூர் சென்றனர். அங்கே முகமது ஷாரிக்கின் கோவை வருகை, அவரின் சந்திப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூருக்கு சுரேந்திரனையும் விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றுள்ளனர். மங்களூரில் இருந்து தனிப்படை போலீசார் கோவை வந்து, முகமது ஷாரிக் தங்கிய பகுதிகளில் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாக சிம்கார்டு விற்ற செல்போன் கடைக்காரர், லாட்ஜ் நிர்வாகிகள், லாட்ஜ் அருகே வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் லாட்ஜில் யாரை சந்தித்தார்?, செல்போனில் யாரிடம் பேசினார்?, என்ன தகவல்கள் பரிமாறப்பட்டது என்ற விவரங்களை செல்போன் கால் லிஸ்ட் மூலமாக பெற முயற்சி எடுத்துள்ளனர்.

மேலும் சுரேந்திரன் செல்போனில் முகமது ஷாரிக் யார் யாரிடம் பேசினார்? என்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. மங்களூர் போலீசாருடன் இணைந்து கோவை போலீசாரும் அந்த லாட்ஜ் வட்டாரங்களில் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கோவை காந்திபுரத்தில் ஷாரிக் தங்கியிருந்த லாட்ஜ், 3 தளங்களில் செயல்படுகிறது. அந்த லாட்ஜில் கோவை, ஊட்டி மற்றும் மங்களூர் போலீசார் சோதனை நடத்தினர். குறிப்பாக செப்டம்பர் மாதம் முகமது ஷாரிக் தங்கிய அறையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மேலும் பதிவேடுகள் குறித்த ஆதாரங்களையும் சேகரித்தனர். சட்ட விரோத செயல்பாடுகள் இருந்ததா? எனவும் விசாரித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் லாட்ஜை உடனடியாக மூடினர்.

* கதறிய சுரேந்திரன்

கோவையில் போலீசார் சுரேந்திரனிடம் விசாரித்தபோது, ‘‘முகமது ஷாரிக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என் குடும்பத்தை பிரிந்து தனியாக இருக்கிறேன. அவர்களை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன்கூட என்னிடம் கிடையாது என கெஞ்சினார். வேலை தேடி வருவதாக கூறினார். நான் அவரிடம் இரக்கம் காட்டி எனது ஆதார் கார்டு நகல் கொடுத்து சிம்கார்டு பெற உதவி செய்தேன். அதற்கு பின் எனக்கு எதுவும் தெரியாது. அவர் இவ்வளவு பெரிய குற்றவாளி என எனக்கு தெரியாது. அவரிடம் நான் நெருக்கமாக பழகவில்லை. என்னை விட்டு விடுங்கள்’’ எனக்கூறி கதறினார்.

* ஜமேஷா முபினுடன் தொடர்பா?

கோவைக்கு வந்த முகமது ஷாரிக் ஏன் லாட்ஜில் தங்கியிருந்தார். இவர் கோவைக்கு எதற்கு வந்தார்? என போலீசார் விசாரிக்கின்றனர். செப்டம்பர் மாதம் முகமது ஷாரிக், கோவை கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபினை சந்தித்தாரா? அவரது நண்பர்கள் வட்டாரத்தை சார்ந்தவருடன் பேசினாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜமேஷா முபினுக்கும், முகமது சாரிக்கிற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: