சிதம்பரம் நடராஜர் கோயிலில் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜை: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு பக்தர்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற வலியுறுத்தி கொடிமரத்துடன் சேர்ந்த சித்சபையை 108 முறை வலம் வந்தனர்.

ஒரு சில பக்தர்கள் 21 முறை வலம் வந்தனர். இன்று அதிகாலை முதலே கோயிலில் சோமவார்த்தை முன்னிட்டு ஆண்கள், பெண்கள், உள்ளூர் பக்தர்கள், வெளியூர் பக்தர்கள், வெளிமாநில பக்தர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆதிமூலநாதர் சுவாமியை தரிசனம் செய்து அங்கும் வெளிப்பிரகாரத்தில் 108 முறை சுற்றி வந்தனர். பின்னர் சிவகாம சுந்தரி அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர்.

அங்கு உள் பிரகாரம் வெளி பிரகாரத்திலும் வலம் வந்து அம்பாளை வழிபட்டனர். இதேபோல் அனந்தீஸ்வரர் கோயிலிலும் சோமவாரத்தை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை சங்காபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

Related Stories: