×

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.45 லட்சத்தில் பேட்டரியால் இயங்கும் 30 குப்பை வண்டிகள்-4 பேரூராட்சிகளுக்கு முதற்கட்டமாக ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்க கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.45 லட்சத்தில் பேட்டரியால் இயங்கும் 30 குப்பை வண்டிகள் கோத்தகிரி, கேத்தி, ஜெகதளா மற்றும் நடுவட்டம் ஆகிய 4 ேபரூராட்சிகளுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வன விலங்குகளின் நலனை கருத்தில் கொண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 19 வகையான ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 1 லிட்டர் குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தனித்தனியாக பிரித்து வாங்கி வருகின்றனர். மக்காத குப்பைகள் மறு சுழற்சிக்கும், மக்கும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கொண்டு உரமும் தயாரிக்கப்படுகின்றன. குப்பைகளற்ற மாவட்டம் என்ற நிலையை எட்டும் நோக்கில் ஊராட்சி பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தில், ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற சிறப்பு விழிப்புணர்வு இயக்கம் துவக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அள்ள லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. லாரிகள் செல்ல முடியாத தெருக்கள், குறுக்கலான சாலைகள், நடைபாதைகளில் தூய்மை பணியாளர்கள் குப்பைகள் வண்டிகள் உதவியுடன் குப்பைகளை சேகரிக்கின்றனர். மேலும் குப்பைகள் அற்ற வாகனங்கள் பயன்படுத்துவதால் அவற்றால் வெளியேறும் புகையால் சுற்றுசூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதனை தவிர்க்கும் நோக்கில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, கேத்தி, ஜெகதளா மற்றும் நடுவட்டம் ஆகிய 4 பேரூராட்சிகளுக்கு தலா ரூ.1.50 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.45 லட்சம் மதிப்புள்ள பேட்டரியால் இயங்கும் 30 குப்பை வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை முழுவதும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறுகையில், ‘‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கோத்தகிரி, கேத்தி, ஜெகதளா மற்றும் நடுவட்டம் ஆகிய 4 பேரூராட்சிகளில் பயன்படுத்துவதற்காக 30 பேட்டரியால் இயங்கும் குப்பை வண்டிகள் வந்துள்ளன. இதில் கோத்தகிரி, கேத்தி பேரூராட்சிகளுக்கு தலா 9 வண்டிகளும், நடுவட்டம், ஜெகதளா பேரூராட்சிகளுக்கு தலா 6 வண்டிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.45 லட்சம். கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மீதமுள்ள பேரூராட்சிகளுக்கு 2வது கட்டமாக மேலும் பேட்டரி வாகனங்கள் வரவழைக்கப்படும்’’ என தெரிவித்தார்.

தீங்கு விளைவிக்கும் பொருள் தனியாக பிரிப்பு

காய்கறி கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகளை தனியாகவும்,  பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள் போன்ற மக்காத குப்பைகள் தனியாகவும்,  மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசி பொருட்கள், சானிட்டரி நாப்கின்கள்,  சிஎப்எல், பல்புகள் போன்ற தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக பொருட்களை  தனியாகவும் பிரித்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Ooty : In Nilgiris district, the artist urban development project to protect the environment will be battery-powered at a cost of Rs 45 lakh.
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...